×

கைதான மனைவி – கணவன் நேருக்கு நேர் வாக்குவாதம் நான் குற்றம் செய்யவில்லை; சம்பவத்திற்கு காரணம் நீ தான்!4 வயது மகனை கொன்ற பெண் அதிகாரி பகீர் வாக்குமூலம்

பனாஜி: 4 வயது மகனை கொன்ற வழக்கில் கைதான தனியார் நிறுவன பெண் அதிகாரியும், அவரது கணவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அவர்களின் வாக்குமூலத்தை கோவா போலீசார் பதிவு செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த சுச்சானா சேத் (39) என்பவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இவர் தனது கணவர் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டுள்ளார்.

இந்நிலையில் சுச்சானா சேத், தன் 4 வயது மகனுடன் கடந்த 6ம் தேதி கோவா சென்றார். அங்குள்ள தனியார் விடுதியில் தன் மகனை கொன்று 8ம் தேதி வாடகை கார் மூலம் பெங்களூரு திரும்பினார். விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் கோவா போலீசார் மற்றும் கர்நாடக போலீசாரின் உதவியோடு சுச்சானா சேத்தை சித்ரதுர்காவில் போலீசார் கைது செய்தனர். அவர் கொண்டுவந்த சூட்கேஸில் 4 வயது மகனின் உடல் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு ேபாலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் 4 வயது மகனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தலையணை அல்லது துணி மூலமாக குழந்தையை அழுத்தி கொலை செய்திருக்கலாம் என்றும், கழுத்திலும், உடலிலும் எவ்வித ரத்த காயமும் இல்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து

தந்தை வெங்கட்ராமனிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உடலை பெங்களூரு கொண்டுவந்து அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே போலீஸ் கஸ்டடியில் இருக்கும் சுச்சானா சேத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சுச்சானா சேத் தனது 4 வயது மகனை கொன்றது குறித்து விசாரணை முடிந்த நிலையில், அவரது கணவர் வெங்கட்ராமனுடன் விசாரணை நடத்த வேண்டியிருந்தது. இருவருக்கும் இடையிலான பிரச்னைகள் குறித்து தனித்தனி வாக்குமூலங்கள் பெற வேண்டி இருந்ததால், வெங்கட்ராமனை விசாரணைக்கு அழைத்தோம்.

போலீஸ் காவலில் இருக்கும் சுச்சானா சேத்தும், அவரது கணவரும் நேருக்கு நேர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கலங்குட் காவல் நிலையத்தில் இருவரின் சந்திப்பு நடந்தது. அப்போது வெங்கட்ராமன் தனது மனைவியிடம், ‘எனது குழந்தையை ஏன் கொலை செய்தாய்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நான் எவ்வித குற்றமும் செய்யவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்கு காரணம் நீங்கள் (கணவர்) தான்’ என்று கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். அதன்பின் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தனது வாக்குமூலத்தை வெங்கட்ராமன் பதிவு செய்தார். அதன்பின் அவர் அனுப்பி வைக்கப்பட்டார். வெங்கட்ராமனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சுச்சானா சேத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

The post கைதான மனைவி – கணவன் நேருக்கு நேர் வாக்குவாதம் நான் குற்றம் செய்யவில்லை; சம்பவத்திற்கு காரணம் நீ தான்!4 வயது மகனை கொன்ற பெண் அதிகாரி பகீர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Bakir ,Panaji ,Goa ,Chuchana Seth ,West Bengal State ,
× RELATED ஜூலை மாதத்திற்குள் 10-15 மாநிலங்களில்...