×

மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம்

நாமகிரிப்பேட்டை, ஜன.14: கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தை முன்னேற்றும் அளவுக்கு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக, சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம் கார்கூடல்பட்டி ஊராட்சி, பிலிப்பாக்குட்டை, பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி முன்னிலை வகித்தார். பல்வேறு சமுகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்தனர். விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: தமிழர்களின் மரபு, பண்பாடு, கலாச்சார வழியில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தைத் திருநாள், தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹1000 ரொக்கம், வேட்டி, சேலை போன்றவற்றை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், ஒவ்வொருவரின் வளர்ச்சியும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கு மாதம் ₹1000 வழங்கும் புதுமை பெண்கள் திட்டம்
என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டாத திட்டங்கள் அனைத்தையும், முதல்வர் செயல்படுத்தி உள்ளார். நாமக்கல் மாவட்டத்தை முன்னேற்றும் அளவிற்கு, பல்வேறு திட்டங்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. ராசிபுரம் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான கூட்டு குடிநீர் திட்டம், ராசிபுரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை, நாமகிரிப்பேட்டையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், தொழில்நுட்ப பூங்கா அமைத்தல் என பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் உருவாக்கிய சமத்துவபுரத்தில், பொங்கல் விழா கொண்டாடுவது சிறப்பானது ஆகும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

விழாவையொட்டி நடைபெற்ற உறியடித்தல், இசை நாற்காலி, கபடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற 56 பேருக்கு, அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். விழாவில், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தங்கவேல், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அபராஜிதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Namakirippet ,Namakkal district ,Samatthu Pongal festival ,Namakkal ,District ,Rasipuram Union ,Karkudalpatti Panchayat ,Philippakutta ,Periyar Memorial Samatthupuram ,Samattuva ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி