×

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டிபட்டி மார்க்கெட்டில் மல்லிகை, பிச்சிப்பூ விலை உயர்வு: கிலோ ரூ.2500க்கு விற்பனை

ஆண்டிபட்டி, ஜன. 14: நாளை தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை நேற்று கிடுகிடு உயர்ந்தது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் பனிப்பொழிவால் சந்தைக்கு பூக்கள் வரத்து அடியோடு சரிந்து உள்ளது. குறிப்பாக மல்லிகைப்பூக்கள் வரத்து மிக மிக குறைந்தே காணப்பட்டது. இதன் காரணமாக நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை ஏலம் போனது. இதேபோல் மல்லிகைக்கு மாற்று பூக்களான பிச்சிப்பூ ,முல்லை பூ, கனகாம்பரம் ஆகிய பூக்களும் கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதே போல இதர பூக்களான செவ்வந்தி, செண்டு, கோழிக் கொண்டை, பன்னீர் ரோஜா, அரளிப்பூ போன்ற பூக்களின் விலையும் கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. வரத்து குறைவு காரணமாக ஆண்டிபட்டி பகுதியில் மல்லிகைப்பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பூக்கள் விலை அதிகரித்தாலும் கடும் பனியால் பூக்கள் செடியிலேயே கருகி வருவதால் பூ விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

 

The post பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டிபட்டி மார்க்கெட்டில் மல்லிகை, பிச்சிப்பூ விலை உயர்வு: கிலோ ரூ.2500க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Andipatti ,Antipatti ,Pongal ,Tamils ,Theni district ,Pichipoo ,
× RELATED ஆண்டிபட்டி அருகே சாலை சீரமைப்பு பணியின் தரம் ஆய்வு