×

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் புகையில்லா போகி கொண்டாட வேண்டும்: மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை, ஜன.14: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், புகையில்லா போகி கொண்டாட வேண்டும், என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தைப்பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதிகாலையில், தங்கள் வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக் போன்றவைகளை தெருக்களில் போட்டு எரிப்பார்கள். இது குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகமாக நடந்து வருகிறது. இந்த டயர், பிளாஸ்டிக் போன்றவைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும், குழந்தைகள், வயதானவர், நோயாளிகள் போன்றவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

எனவே இதைத் தடுக்க அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, அடர்ந்த புகை மற்றும் நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அனைவரும் போகி பண்டிகையின்போது, தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். தங்கள் வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை எரிக்காமல், வீடு வீடாக வந்து குப்பையைச் சேகரிக்கும் தூய்மைப் பணியாளரிடம் அவற்றை வழங்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

The post சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் புகையில்லா போகி கொண்டாட வேண்டும்: மாநகராட்சி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Bhogi ,Tamil Nadu ,Thai Pongal ,
× RELATED முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை...