×

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அரசுப்பள்ளிக்கு 1.5 ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கிய பெண்: 29ம் தேதி பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் கவுரவிப்பு

சென்னை: அரசுப்பள்ளிக்கு 1.5 ஏக்கர் நிலத்தை கொடையாக வழங்கிய பூரணம் அம்மாள், வரும் 29ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் கவுரவிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் அரசுப்பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான, 1.5 ஏக்கர் நிலத்தை, மதுரை புதூரில் வசிக்கும் ஆயி பூரணம் அம்மாள் நன்கொடையாக வழங்கி இருந்தார்.

தன் மகள் ஜனனியின் நினைவாக அவர் பெயரை மட்டும் பள்ளி வளாகத்துக்கு வைக்கக் கோரியுள்ளவர், விளம்பரப்படுத்தாமல் நிலத்தை அரசின் பெயரில் பதிவு செய்து ஆவணத்தை கல்வித்துறை அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு வழக்கமான தன் வங்கிப் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரின் இந்த செயலால் பள்ளி நிர்வாகம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. மேலும் பலதரப்பில் இருந்தும் பூரணம் அம்மாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாளுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் அவர்களின் தொண்டு மகத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கவுரவிக்கப்பட உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

The post அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அரசுப்பள்ளிக்கு 1.5 ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கிய பெண்: 29ம் தேதி பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் கவுரவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh Information Government School ,Parent Teacher Association ,Chennai ,School Education Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Puranam Ammal ,Parent Teacher Association Regional Conference ,Madurai ,Madurai… ,Anbil Mahesh ,Parent Teacher Association conference ,
× RELATED தினமும் ஈடுபட்டு வரும் ஊழியர்கள்...