×

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் பயணம்

* பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
* வாகன நெரிசலால் ஜி.எஸ்.டி சாலை ஸ்தம்பித்தது

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து பஸ், ரயில்கள், கார், விமானம் மூலம் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் பொருட்களான கரும்பு, பானை, மஞ்சள், காய்கறி விற்பனையும் களைகட்டியது. சென்னையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கோவை, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் இருக்கிறார்கள்.இவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட கடந்த 12ம் தேதி மாலை முதல் சென்னையில் இருந்து பலர் பயணம் மேற்கொண்டனர்.

கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கிளாம்பாக்கம் ஆகிய 6 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த இடங்களுக்கு செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. 12ம் தேதி 2 லட்சம் பேரும், நேற்று 3.50 லட்சம் பேரும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல்லாகி இருந்தன. இதன்படி, இதுவரை 2.50 லட்சம் பேர் ரயில்கள் மூலம் பயணம் மேற்கொண்டு இருக்கலாம் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, விமானம், ஆம்னி பஸ், கார், வேன் மூலமாகவும் 2 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் வரை கடந்த 3 நாட்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மக்கள் சொந்த ஊர் செல்ல பயணத்திட்டத்தை வகுத்து பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் மற்றொரு புறம் தமிழகம் முழுவதும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை உற்சாகத்துடனும், மண்ணின் மணத்துடனும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகிறார்கள். தை திங்கள் முதல் நாளை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடுவார்கள்.

புத்தாடை அணிந்தும், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் புத்தாடைகள் வாங்க கூட்டம் அலை மோதியது. தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் நேற்றைய தினம் கூட்டம் அலைமோதியது. அதேபோல், பொங்கல் பொருட்களான பானை, கரும்பு, மஞ்சள் வாங்கவும் கடைகளில் மக்கள் குவிந்தனர். மேலும் வாழைக்கன்று, மண்பானை, வாழை இலை, மாங்கொத்து, தோரணம், பழவகைகள், பூக்கள் உள்ளிட்ட விற்பனையும் களைகட்ட தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல்: போலீசே இல்லாததால் மக்கள் அவதி
பொங்கல் விடுமுறை எதிரொலியாக செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசாரே இல்லாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவிலான மக்கள் செல்வதால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சுங்கச்சாவடியை கடப்பதற்கே 2 மணி நேரம் ஆனது. நேற்று காலை முதல் கார்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட வேண்டிய போலீசார் இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என மாநிலம் முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காரணமாக பல மணி நேரம் தாமதமாக சொந்த ஊர்களுக்கு சென்றனர். மாவட்டங்களில் போலீசார் தகுந்த ஏற்பாடு செய்யாததால் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் நேரத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pongal festival ,Pongal festival.… ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா