×

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


சென்னை: தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2024ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கும், 2023ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்துக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது உ.பலராமனுக்கும், பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கும், பாரதிதாசன் விருது எழுச்சி கவிஞர் ம.முத்தரசுக்கும், திரு.வி.க. விருது பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கும், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது இரா.கருணாநிதிக்கும் வழங்கப்பட்டது.

விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கி சிறப்பித்தார். விருதாளர்களுக்கு தலா ரூ2 லட்சம் காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2023க்கான தந்தை பெரியார் விருது சுப.வீரபாண்டியனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2023க்கான அம்பேத்கர் விருதை பி.சண்முகத்துக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விருதுடன் அவர்களுக்கு தலா ரூ5 லட்சம், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, என்.கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.செல்வராஜ், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tamil Development Department ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,Tavathru Balamuruganadimai Swami ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...