×

தமிழ்நாட்டில் 2013 முதல் தற்போது வரை காணாமல்போன 6000 நபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை: தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 2013 முதல் தற்போது வரை காணாமல் போன 6000 நபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள காவல் நிலைய அறிவிப்பு பலகைகளில் காணாமல் போனவர்களின் விவரப்பட்டியல் ஒட்டப்பட்டிருக்கும். பிள்ளைகளை தொலைத்த பெற்றோர், வயதான தாய், தந்தையை பறிகொடுத்த பிள்ளைகள் என தொலைந்து போனவர்களை எப்படியாவது கண்டுபிடித்து விடலாம் என நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்த விவசாயியின் மகன் கேசவன்(18) கடந்த 2011ல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காணாமல் போனது குறித்து அன்றைய தினமே காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். ஆனால் ஏறத்தாழ 12 வருடங்கள் ஆகியும் தற்போதுவரை மகன் கிடைக்காமல் பெற்றோர் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சமீபத்தில் ஜன. 4ம் தேதி திருச்செந்தூர், பரமன்குறிச்சியை சேர்ந்த சிவமணி முத்து (26) என்ற இளைஞர் சென்னைக்கு வந்த பின்னர் காணாமல் போயுள்ளார். காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அதே போல், பெரம்பூர் சங்கரமடம் பகுதியை சேர்ந்த வரதன் என்பவரை காணவில்லை என மூன்று மாதங்களுக்கு முன் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தும் தற்போது வரை எந்த தகவலும் கிடைக்காமல் அவரது வயதான மனைவி காவல் நிலையம், காவல் ஆணையாளர் அலுவலகம் என அலைந்து தவித்து வருகின்றார். இவர் நேற்று முன்தினமும் சென்னை காவல் ஆணையாரிடம் மீண்டும் புகாரளித்துள்ளார். இதுபோன்று அடுக்கி கொண்டே போகலாம். இவ்வாறு தொலைந்து போனவர்கள் மீட்கப்படுகிறார்களா..?

என அறிவதற்கு சென்னை சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரங்களைகோரினார். அதில் கடந்த 2013 முதல் தற்போது வரை சுமார் 6,000 பேர் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மாவட்டத்தில் 1600க்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர். பல தொழில்நுட்ப வசதிகள் காவல் துறையில் இருந்தாலும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 2013 முதல் தற்போது வரை காணாமல்போன 6000 நபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை: தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,RTI ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...