×
Saravana Stores

இன்று முதல் 17ம் தேதி வரை நாட்டுப்புற கலைஞர்களின் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா: கடற்கரை, பூங்கா உள்பட 18 இடங்களில் நடக்கிறது

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி வைத்தார். இதையடுத்து இன்று (14ம் தேதி) முதல் வரும் 17ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையின் முக்கிய சந்திப்புகளில் மக்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

மக்கள் அதிகம் கூடும் தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் பழனியப்பா நகர் லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நாட்டுப்புற பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் ஆகியவை இடம்பெறுகின்றன.

மேலும் பஞ்சாப்பின் பாங்ரா மற்றும் ஜிந்துவா நடனம், ஒடிசாவின் சம்பல்புரி நடனம், மணிப்பூரின் லை ஹரோபா நனடம், காஷ்மீரின் ரூப் நடனம், பரதநாட்டியம், காவடியாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், மேளம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, நாட்டுப்புற ஆடல் – பாடல், வில்லிசை, கையுறை பாவைக்கூத்து, கோல்கால் ஆட்டம், இறை நடனம், தேவராட்டம், கணியான் கூத்து, ஜிம்பளா மேளம், களரி, மெல்லிசை, கட்டைக்கூத்து, நாடகம் உள்ளிட்ட ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

நிகழ்ச்சி நடைபெறம் இடங்களில் கலைப்பொருட்கள் விற்படை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன. மூலிகை உணவுகள், கடல் உணவுகள், பாரம்பரிய மசாலாவுடன் கூடிய சுவையான கிராமிய உணவு வகைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

* ‘குழந்தைகளோடு காணுங்கள்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தாரை தப்பட்டை பறையிசை முழங்க ஆர்ப்பரித்த சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முரசறைந்து தொடங்கி வைத்தேன். சென்னையின் 18 இடங்களில் மாலை 6 முதல் 9 மணி வரை நடைபெறும் இந்த சென்னை சங்கமம் 2024 நிகழ்ச்சியை உங்கள் குழந்தைகளோடு காணுங்கள். நம் கலைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள் என கூறியுள்ளார்.

The post இன்று முதல் 17ம் தேதி வரை நாட்டுப்புற கலைஞர்களின் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா: கடற்கரை, பூங்கா உள்பட 18 இடங்களில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Chennai Sangamam-Namma Uru festival of folk artists ,Chennai ,Pongal festival ,Chief Minister ,M.K.Stalin ,Chennai Sangamam – Namma Uru festival ,Arts and Culture Department ,Tamil Nadu Government ,Chennai Island ,
× RELATED பொங்கல் திருவிழா