×

நட்டாத்தி சாலையோரம் மழைநீர் வடிகால் வாய்க்கால் பள்ளத்தில் தேங்கும் தண்ணீரால் விபத்து அபாயம்-தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா?

ஏரல் :  சாயர்புரம் அருகே நட்டாத்தி சாலையோரம் மழைநீர் வடிகால் வாய்க்கால் பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் அவதிப்படும் வாகனஓட்டிகள், அவ்விடத்தில் தடுப்பு சுவர் அமைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் இருந்து சாயர்புரம் செல்லும் வழியில் நட்டாத்தியில் மழைநீர் செல்வற்காக சாலையோரத்தில் அமைக்கப்பட்ட வடிகால் வாய்க்காலானது, நட்டாத்தி ஊர் அருகே மிகவும் பள்ளமாக இருப்பதால்  மழைகாலத்தில் பெருக்கெடுக்கும் தண்ணீரானது அவ்விடத்தில் குளம் போல் தேங்கிநிற்கும் அவலம் தொடர்கிறது. இதன் அருகேயுள்ள சாலை வழியாக சாயர்புரம், மீனாட்சிப்பட்டி கல்லூரி, பள்ளிக்கு ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் ஏரலில் இருந்து பெருங்குளம், பண்டாரவிளை வழியாக சாயர்புரம் மற்றும் தூத்துக்குடிக்கு அதிக அளவில் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களும் பயணிக்கின்றன. இவை நட்டாத்தி அருகே செல்லும் போது போக்குவரத்து நெருக்கடி காரணமாக அந்த இடத்தில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் அவதிக்கு உள்ளாகும் வாகன ஓட்டிகள், இந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் எப்போதும் தண்ணீர் தேங்கிநிற்கும் சாலையோரத்தில் தடுப்புச் சுவர் அல்லது தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா? என எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அதிமுக வர்த்தக அணி மாவட்டத் தலைவரான பண்ணைவிளையைச் சேர்ந்த திருத்துவசிங் கூறுகையில் ‘‘பெருங்குளத்தில் இருந்து பண்டாரவிளை, நட்டாத்தி வழியாக சாயர்புரம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் நட்டாத்தியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் செல்லும் வடிகால் கால்வாயில் பெரிய பள்ளம் இருப்பதால் அதில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றொரு வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ஒதுங்கும் போது இந்த பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையோரத்தில் பொதுமக்கள் நலன் கருத்தி தடுப்புச் சுவர் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றார்….

The post நட்டாத்தி சாலையோரம் மழைநீர் வடிகால் வாய்க்கால் பள்ளத்தில் தேங்கும் தண்ணீரால் விபத்து அபாயம்-தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Nadathi road ,Sairapuram ,Dinakaran ,
× RELATED அழகான குழந்தைப் பேறுக்கு அமைய வேண்டிய பொருத்தம்