×

சில்லி பாயிண்ட்

ஆஸ்திரேலியா 2-0
ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின. கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் இர்வின் 50வது நிமிடத்திலும், ஜார்டன் போஸ் 73வது நிமிடத்திலும் கோல் போட்டனர். இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் ஜன.18ம் தேதி உஸ்பெகிஸ்தானையும், கடைசி லீக் ஆட்டத்தில் 23ம் தேதி சிரியாவையும் சந்திக்கிறது.

இந்தியா-ஏ டிரா
இங்கிலாந்து லயன்ஸ் – இந்தியா-ஏ அணிகள் மோதிய 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. அகமதாபாத் மோடி ஸ்டேடியம் ‘பி’ மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் லயன்ஸ் 233 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்திருந்த இந்தியா-ஏ நேற்று 8 விக்கெட் இழப்புக்கு 462 ரன் குவித்த நிலையில் (91 ஓவர்) டிக்ளேர் செய்ய ஆட்டம் டிராவானது.பத்திதார் 111 ரன், சர்பராஸ் 96, கர் 64, துருவ் 50 ரன் விளாசினர்.

பைனலில் சாய்-சிராக்
மலேசியா ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறு தியில் கொரியாவின் உலக சாம்பியன்கள் சியோ சியூங் ஜே – காங் மின் ஹியுக் ஜோடியுடன் நேற்று மோதிய சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி (இந்தியா) இணை 21-18, 22-20 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறியது.

தமிழ்நாடு 122/2
அகர்தலாவில் திரிபுரா அணியுடன் நடக்கும் ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்துள்ளது (41 ஓவர்). விமல் குமார் 14, பாலசுப்ரமணியம் 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திரஜித் 47 ரன், விஜய் ஷங்கர் 50 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், நேற்றும் போதிய வெளிச்சமில்லாததால் 41 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா வெற்றி
ஒலிம்பிக் தகுதிச்சுற்று மகளிர் ஹாக்கி தொடரில் ராஞ்சி, பிர்சா முண்டா அரங்கத்தில் நேற்று இரவு நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா – அமெரிக்கா மோதின. அமெரிக்க வீராங்கனை டேமர் அபிகெய்ல் 16வது நிமிடத்தில் அபாரமாக கோல் போட்டு அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார். பதில் கோல் அடிக்க இந்திய வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

The post சில்லி பாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : Silly Point ,Australia ,AFC Asia Cup football ,India ,Ahmed Bin Ali Stadium ,Doha ,Qatar ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது