×
Saravana Stores

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள நிவாரண நிதி விவகாரம்; அமித்ஷாவுடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு

புதுடெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்பாலு தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமித்ஷாவுடன் சந்தித்தனர். இந்த சந்திப்பில் சென்னை, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்குமாறு வலியுறுத்தினர்.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப்பொழிவின் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. வரலாறு காணாத இந்த கனமழையின் காரணமாக தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் தற்போது வரை பாதித்து வருகிறார்கள் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. பல குளங்கள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களையும் தமிழ்நாடு அரசு வழங்கியது. தமிழக அரசு எடுத்த விரைவான மீட்பு காரணமாக இந்த மாவட்ட மக்கள் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பினர்.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒன்றிய அரசு சார்பில் அனுப்பிய குழுவும் நேரில் வந்து பார்வையிட்டு சென்றது. தற்போது 2வது முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. இதுபோன்ற சூழலில் கடந்த மாதம் டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் புயல் மற்றும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண நிதி மற்றும் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.3,096 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் நேரில் வந்து பார்வையிட்டு சென்றனர். தமிழகத்திற்கு தற்காலிக நிவாரணமாக 7,959 கோடி ரூபாயும், நீண்ட கால சீரமைப்பு தொகையாக 17,952 கோடி வழங்க வேணடும் என்று கேட்கப்பட்டது. ஆனால் தற்போது வரையில் வெள்ள பாதிப்புக்கான நிவாரண தொகை ஒன்றிய அரசால் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கோரிய ரூ.39,000 கோடியை உடனே விடுவிக்க வலியுறுத்தினர்.

The post தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள நிவாரண நிதி விவகாரம்; அமித்ஷாவுடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : RAINFALL ,TAMIL NAGAR ,AMITSHAH ,NEW DELHI ,DIMUKA COMMITTEE ,T.D. ,DELHI ,Arbalu ,Amitsha ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை:...