×

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (13.01.2024) திருக்கோயில்களின் கட்டண சேவைகளில் விரைவாக கட்டண சீட்டுகளை வழங்கிடும் வகையிலும், கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தினை தவிர்க்கவும், பக்தர்கள் எளிய முறையில் பற்று அட்டை (Debit Card) மற்றும் கடன் அட்டை (Credit Card) மூலமாக கட்டணச் சீட்டு பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக, 260 திருக்கோயில்களுக்கு 315 கையடக்க கருவிகளை (Point of Sale Terminal) மண்டல இணை ஆணையர்களிடம் வழங்கினார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறையில் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வசதிகளை செயல்படுத்தி பல்வேறு வசதிகளை பக்தர்களின் தேவைகளுக்காகவும் திருக்கோயில்களின் வரவு செலவுகள் சரியான முறையில் பராமரிப்பதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

முதற்கட்டமாக கடந்தாண்டு 550 திருக்கோயில்களுக்கு 1,700 கையடக்க கட்டணக் கருவிகளை வழங்கினோம். அதன்மூலம் ரூ.210 கோடி கட்டணங்களாக கிடைக்கப்பெற்றுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக இருப்பதால் அதனை விரிவுப்படுத்திடும் வகையில் இன்றைய தினம் 260 திருக்கோயில்களுக்கு 315 கையடக்க கட்டணக் கருவிகள் வழங்கியுள்ளோம். இதன்மூலம் திருக்கோயில்களில் கட்டணச் சீட்டு பெறுவதற்கும் நன்கொடைகள் வழங்குவதற்கும் பக்தர்களுக்கு சுலபமாக இருக்கும்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 திருக்கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம். மன்னர்களாலும், மூதாதையர்களாலும் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான திருக்கோயில்களாக 717 திருக்கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாத்து புனரமைக்க முதலமைச்சர் அவர்கள் அரசு மானியமாக ரூ.200 கோடியும், உபயதாரர்கள் ரூ.130 கோடியும் வழங்கி இருக்கின்றார்கள்.

இதன்மூலம் 100 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆண்டில் 80 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் பணிகளும், நிலங்களை அளவீடு செய்து காக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை ரூ.5,558 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டிருப்பதோடு, 1.55 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன.  முருகப் பெருமான் திருக்கோயில்களில் தைப்பூச விழாவினை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு நடத்திட இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு இலகுவாகவும், விரைவாகவும் தரிசனம் செய்திட ஏற்பாடுகள் செய்யப்படும்.  அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் வருகின்ற ஜனவரி 28 ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கின்றது. 60 வயது முதல் 70 வயது வரையிலான 1,000 பக்தர்கள் 5 குழுக்களாக அழைத்து செல்லப்பட உள்ளனர். முதல் குழுவில் 200 பக்தர்களோடு இணை ஆணையர் ஒருவரும், மருத்துவ குழுவினரும் செல்வார்கள்.

இராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்தில் இந்தாண்டு 300 நபர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக அரசு ரூ.75 லட்சம் மானியமாக வழங்கி உள்ளது. முதல் குழுவில் 60 நபர்கள் பிப்ரவரி 1-ந் தேதி புறப்படுகின்றனர். இவர்களுடன் அலுவலர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உடன் செல்வர். இதுபோன்ற பல்வேறு புதிய திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுடைய சேவைக்காகவும், இறை தரிசனத்திற்காகவும் தொடர்ந்து செய்து வருகிறது.

முதலமைச்சர் அவர்கள் தவறு எங்கு நடந்திருந்தாலும் எந்த காலத்தில் நடந்திருந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்கள். திருச்செந்தூர் முருகன் கோயிலில் நகைகள் தொடர்பாக தணிக்கை அலுவலர்கள் தெரிவித்த தவறுகள் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு நடந்த தவறுகள் இல்லை என்றிருந்தாலும் அதன்மீது உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க திருக்கோயில் இணை ஆணையருக்கும், மண்டல இணை ஆணையருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பெற்றவுடன் தவறு யார் செய்திருந்தாலும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்த அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் தயங்காது.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தபின் முதற்கட்டமாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படுகின்றன. விரைவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லுகின்ற பேருந்துகள் இன்னும் ஒரு வருட காலத்திற்கு இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைப்பதற்கும், பேருந்து முனையத்திற்கு ஆகாய நடை மேம்பாலம் அமைப்பதற்கும், தேசிய நெடுஞ்சாலையில் பாதசாரிகளுக்காக நடைமேம்பாலமும் அமைப்பதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி முடிவினை எடுக்கும். ஆகவே தற்போது இதில் தேவையற்ற சர்ச்சையை கிளப்ப வேண்டாம்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தில் ஒப்பந்தம் எடுத்தவர்கள் படிப்படியாக கடைகளை அமைத்து வருகிறார்கள். தற்போது அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு ஆவின் பாலகங்கள் முழுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள், மருத்துவமனை ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படுகின்ற போது அனைத்து கடைகளும் செயல்பாட்டிற்கு வரும். மக்கள் தேவைக்கேற்ப அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் அதற்குண்டான முயற்சிகளில் இறங்கி இருக்கின்றது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, தனி அலுவலர்கள் (ஆலய நிலங்கள்) திருமதி கோ.விஜயா, சு.ஜானகி, இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் மகேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

The post 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல். appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Foundation ,Minister ,P. K. Sekarbaba ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,K. ,Stalin ,Hindu ,P. K. ,Hindu Religious Institutions ,P. K. Sakharbapu ,
× RELATED அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்...