நாமகிரிப்பேட்டை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமகிரிப்பேட்டை பகுதியில் சாலையோரம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில், வெளியூர்களின் இருந்து கரும்பை வாங்கிவந்து வியாபாரிகள் கடை போட்டு உள்ளனர். இங்கு ஒரு ஜோடி கரும்பு ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, மேட்டூர், இடைப்பாடி, ஜேடர்பாளையம், சமயசங்கிலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டன் கணக்கில் கரும்புகளை வாங்கி வந்து, சாலையோரம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விற்பனைக்கு குவித்து உள்ளனர். இங்கு 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது. அதேசமயம் சில்லரை விலையில் ஜோடி கரும்பு ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.
இதுகுறித்து கரும்பு வியாபாரி சந்திரா கூறியதாவது: ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு கரும்பு விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, விவசாயிகளிடம் ஏக்கர் கணக்கில் மொத்தமாக கரும்பை விலை பேசி, கூலி ஆட்கள் மூலம் கரும்புகளை வெட்டி 20க்கும் மேற்பட்ட லாரியில் எடுத்துவந்து கரும்புகளை பிரித்து கடை போட்டு உள்ளோம். ேரஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு இலவசமாக வழங்குவதால் தற்போது கரும்பு விற்பனை மந்தமாக உள்ளது. அடுத்தடுத்த நாட்களில் விற்பனை சூடு பிடிக்கும். வாகனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு வாங்கும்போது விலை உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பொங்கல் பண்டிகையையொட்டி நாமகிரிப்பேட்டையில் செங்கரும்பு குவிப்பு: ஜோடி ரூ.80க்கு விற்பனை appeared first on Dinakaran.