×

பூ மார்க்கெட் ஏலத்தில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு: நிலக்கோட்டையில் பரபரப்பு

 

நிலக்கோட்டை, ஜன. 13: நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம் அருகே பூ மார்க்கெட் அமைந்துள்ளது. தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இப்பூ மார்க்கெட்டில் மொத்தம் 65 கடைகள் உள்ளன. ஏற்கனவே 1 முதல் 44 வரையிலான கடைகளுக்கு ஏலம் நடந்து முடிந்த நிலையில், விவசாயி ஒருவர் அளித்த வழக்கின்படி ஐகோர்ட் மதுரை கிளை அரசு வழக்கறிஞர் பிரித்விராஜ் என்பவரை ஆணையராக நியமித்து அவர் தலைமையிலும், செயல் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலையிலும் நேற்று உரிய விளம்பரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மற்ற கடைகளுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பொது ஏலம் நடத்தப்பட்டது. கடைகளை ஏலம் எடுக்க 50க்கும் மேற்பட்ட வணிகர்கள் வரைவோலையுடன் வந்திருந்தனர்.

சிறிது தாமதத்திற்கு பின் ஏலம் துவங்கிய நிலையில் அலுவலகத்திற்குள் திடீரென 20க்கும் மேற்பட்ட பூக்கடைக்காரர்கள் புகுந்தனர். அப்போது அவர்கள், ‘ஏலம் நடத்த கூடாது, ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கூறி ரகளையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஆணையரிடம் மனு அளித்தனர். இதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வணிகர்களுக்கும், பூக்கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து வணிகர்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உண்டானதால் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

The post பூ மார்க்கெட் ஏலத்தில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு: நிலக்கோட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,South Tamil Nadu ,Tollumullu ,
× RELATED நிலக்கோட்டை சக்கையநாயக்கனூரில்...