×

கூட்டணியில் இருந்து வெளியேறிய விவகாரம் சாப்பாடு கதை கூறி அதிமுகவை சாடினார் அண்ணாமலை

சென்னை: கூட்டணியில் இருந்து வெளியேறிய விவகாரத்தில், அதிமுகவை சாப்பாடு கதையை கூறி கடுமையாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக பாஜ மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடந்தது. பாஜ மாநில செயலாளரும், தொகுதி அமைப்பாளருமான வினோஜ் பி.செல்வம் தலைமை தாங்கினார். மாநாட்டில், பங்கேற்றவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார். மாநாட்டில் அவர் அண்ணாமலை பேசியதாவது:

பாஜ தொண்டர்கள் கூட்டணி குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்கின்றனர். நாம் ஒரு வீடு கட்டுகிறோம். புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடக்கிறது. கிரகப்பிரவேசத்திற்கு வருபவர்கள் தங்கி சாப்பிட்டு விட்டு செல்வார்கள். இதில், வீடு என்பது தேசிய ஜனநாயக கூட்டணி. இந்த வீடு பிடித்தவர்கள் வருவார்கள். அதில், சிலர் சாப்பிட்டு வீட்டில் தங்குவார்கள். சிலர் சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவார்கள். சிலர் சாப்பிட்டு விட்டு, வெளியே சென்று சாப்பாடு சரியில்லை என்றும், வீடு சரியில்லை என்றும் சொல்வார்கள். இது, அவர்கள் கருத்து. ஆனால், வீடு நம்முடையது.

பிரதமர் மோடியை ஏற்றுக் கொண்டு பயணிக்க விரும்புபவர்கள் வரலாம். அதற்காக, பாஜவின் கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வைத்துள்ளோம். இதில் எந்த குழப்பமும் தேவையில்லை. தொண்டர்கள் குழப்பமின்றி பயணிக்கலாம். 60 நாட்கள் களத்தில் நாம் விறுவிறுப்பாக பணியாற்ற வேண்டும். கோட்டைவிட்டால் சரித்திரம் நம்மை மன்னிக்காது. தொண்டர்கள் 60 நாட்கள் உயிரை கொடுத்து களத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில், அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மாவட்ட தலைவர்கள் விஜய் ஆனந்த், தனசேகர், நடிகை நமீதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கூட்டணியில் இருந்து வெளியேறிய விவகாரம் சாப்பாடு கதை கூறி அதிமுகவை சாடினார் அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,AIADMK ,Chennai ,Tamil ,Nadu ,BJP Central Chennai Parliamentary Constituency Workers Meeting ,Rayapetta YMCA ,BJP ,State ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...