×

தீவுத்திடலில் 70 நாட்கள் நடக்கிறது 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை தீவுத்திடலில் 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த பொருட்காட்சியில் ராட்டினங்கள், பொருட்கள் வாங்கும் கடைகள், உணவகங்கள் என ஏராளமான கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பொருட்காட்சியின் நுழைவாயில் தமிழக பண்பாடு, கலாசாரத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் ஒன்றிய, மாநில அரசு துறைகளின் அரங்குகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 60 தனியார் அரங்குகளும், 125 சிறிய கடைகளும் இடம்பெற உள்ளன. 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பொழுதுபோக்கு விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட உள்ளது.

40க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் சுற்றிப்பார்க்கும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சென்னை தீவுத்திடலில் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திய நாட்டியத் திருவிழா தினமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி தயாநிதி மாறன் மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்படி நேற்று தொடங்கப்பட்ட சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை 70 நாட்கள் வரை நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

The post தீவுத்திடலில் 70 நாட்கள் நடக்கிறது 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : 48th Tourism and Industry Fair ,Minister ,Udayanidhi ,Chennai ,Sports Minister ,Udayanidhi Stalin ,48th Tourism and Industry Expo ,Chennai Island ,48th Tourism and Industry Exhibition ,Island ,
× RELATED நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர்...