×

காசநோயை முற்றிலுமாக ஒழிக்க புதிய திட்டம் எங்கேயும் அலைய வேண்டாம் எல்லா சேவையும் ஒரே இடத்தில்

* ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை முதல் சிகிச்சை வரை அனைத்தையும் பெறலாம்

* 2025ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழ்நாட்டை ஏற்படுத்த இலக்கு

மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு வகையான பாக்டீரியா தொற்று, வைரஸ் நோய்கள் உருவாக்கி வருகிறது. இதில் மிகவும் ஆபத்தான தொற்று என்றால் காச நோயை (tuberculosis) கூறலாம். 1882ம் ஆண்டு தான் உலகில் முதன்முதலாக காச நோய் என்ற ஒரு கொடிய நோய் கண்டறியப்பட்டது. காசநோய் பாக்டீரியாவால் ஏற்படுகிறது (மைக்கோபாக்டீரியம் காசநோய்) குறிப்பாக, இந்த தொற்று நுரையீரலை பாதிக்கிறது. நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், துப்பும்போது காசநோய் காற்றில் பரவுகிறது. அந்த காச நோய் காற்றில் இருக்கும் போது அதை சுவாசிக்கும் நபருக்கு இந்த தொற்று பரவுகிறது.

ஒரு நபருக்கு நோய்த்தொற்று ஏற்பட சில கிருமிகளை மட்டுமே சுவாசித்தால் போதுமானது. இதன் தாக்கம் நுரையீரலில் ஆரம்பித்து நம்முடைய ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தையும் இரைப்பை மற்றும் குடல் பகுதியையும் பாதிக்கும் தன்மை கொண்டது. உலக சுகாதார நிறுவனம் ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும், 10 மில்லியன் பேர் இந்த காசநோயால் (டிபி) பாதிக்கப்படுகின்றனர். காச நோய் தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய நோயாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் பேர் இறக்கின்றனர். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மரணத்திற்கு காசநோய் முக்கிய காரணமாக அமைகிறது.

குறிப்பாக, 2022ம் ஆண்டில் அதிக பேர் இறப்புக்கு கொரோனா தொற்றுதான் காரணமாக இருந்தது. கொரோனா தொற்றுக்கு அடுத்தபடியாக காசநோய் தான் உள்ளது. 2022ம் ஆண்டில் மட்டும் 10.6 மில்லியன் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 196 பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டால் 126 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இத்தகைய கொடுரமான நோயை முற்றிலுமாக ஒழிக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைய வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலமும் புதிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாட்டில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறிவதற்குரிய பரிசோதனைகள், சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ சேவைகளும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து மருந்துகள், முதுலுதவிகள் உள்ளடக்கியவை கிடைக்கிற வகையில் ‘வாக் இன் சென்டர் – ஒன் ஸ்டாப் டிபி சொல்யூஷன்’ (“Walk-in Centre- One Stop TB solution”) என்ற திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஒருவர் காசநோய் அறிகுறியுடன் வந்தால் அவருக்கு பரிசோதனை முதல் சிகிச்சை வரை அனைத்தும் ஒரே மையத்தில் செய்து தரப்படும். இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் 2025ம் ஆண்டுக்குள் காசநோயை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மையம் எவ்வாறு செயல்படுகிறது, எந்த வகையான சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது உள்ளிட்டவை குறித்து பொது சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், இந்த மையத்தில் அறிகுறியுடன் வந்தால் 24 மணி நேரத்தில் அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகிறது. மார்பு எக்ஸ்ரே எடுக்க அருகில் உள்ள சமூக சுகாதார மையம், அரசு தாலுகா மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

பரிசோதனை முடிவுகள் வந்து 24 மணிக்குள் சிகிச்சை தொடங்கப்படுகிறது. காச நோய் பரிசோதனைகளுடன் நீரிழிவு மற்றும் எச்.ஐ.வி போன்ற சோதனைகளும் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி காச நோய் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பு இருந்தவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இறுதியாக பாதிக்கப்பட்ட விவரம் மற்றும் நோய் பாதிப்பு உள்ளிட்டவை பொது சுகாதாரத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுபோன்று அனைத்து பணிகளும் ஒரே மையத்தில் செய்வதால் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: இந்த திட்டம் என்பது ஒரு “ஜீரோ காஸ்ட் திட்டம்”. ஏற்கனவே இருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கி இந்த திட்டத்திற்கு பயன்படுத்துகிறோம். தற்போது வட்டார அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறோம். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை வழங்க வேண்டும் என்ற பயிற்சியையும் மருத்துவர்களுக்கு வழங்கி இருக்கிறோம்.

ஆங்காங்கே இருக்கக்கூடிய வளத்தை ஒன்று சேர்த்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவர் காச நோய் அறிகுறியுடன் வந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்கள் மூலம் பரிசோதனை
23 டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அத்துடன் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்கள் தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்கள், மலைக்கிராமங்கள் போன்ற அனைத்து கிராமங்களுக்கும் சென்று சளி மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்வதும், டிஜிட்டல் எக்ஸ்ரே எடுப்பதும் என்கின்ற வகையில் மிகப்பெரிய அளவிலான சோதனைகளை செய்து வருகிறது. மொபைல் எக்ஸ்ரே (Diagnostic vans) பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் 46 என் எ எ டி (NAAT) கருவிகள் அதாவது காசநோயினை துல்லியமாக கண்டறியும் அதிநவீன கருவிகள் பயன்பாட்டில் உள்ளது.

* பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
இதுவரை தமிழ்நாட்டில் 97,000 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். காச நோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்கும் திட்டமும் தற்பொழுது செயல்பாட்டில் உள்ளது. அத்துடன் புரதச்சத்துடன் கூடிய உணவு பெட்டகம் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இச்செயலில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

* நோய் அறிகுறிகள் என்ன?
காச நோய் ஆரம்பக் கட்டத்தில் நுரையீரலை மட்டும் பாதிக்கும். காய்ச்சல், நெஞ்சு வலி, இருமும்போது சளியுடன் ரத்தம் வெளிவருதல், தொடர்ச்சியான இருமல் பிரச்னை, தொடர்ந்து சோர்வாக இருத்தல், பசியின்மை, இரவு நேரங்களில் அதிகப்படியான வியர்வை வெளியேறுதல், திடீர் எடை குறைவு போன்றவை அடிப்படை அறிகுறிகள்.

* உணவு முறை
காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் எடை குறைவை சந்திப்பார்கள். எனவே அவர்கள் முறையாக உணவை எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் நிறைந்த உணவுகள் அதாவது தக்காளி, ஆரஞ்சு, கேரட், மாம்பழம், பூசணிக்காய், கொய்யாப்பழம், நெல்லிக்காய் மற்றும் நட்ஸ் வகைகள் உள்ளிட்ட வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளைக் காசநோய் உள்ளவர்கள் தங்களுடைய தினசரி உணவில் கடடாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் புரதங்கள் நிறைந்த முட்டை, பனீர், சீஸ், சோயா பொருட்கள், சிக்கன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

The post காசநோயை முற்றிலுமாக ஒழிக்க புதிய திட்டம் எங்கேயும் அலைய வேண்டாம் எல்லா சேவையும் ஒரே இடத்தில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...