×

தோட்டக்காரனின் கிருஷ்ண பக்தி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீமந் நாராயணன் எடுத்த தசாவதாரங்களில் உன்னதமான, ஒரு அவதாரம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. எண்ணற்ற பாகவத சிரோன் மணிகள் கிருஷ்ண பக்தியில லயித்து வாழ்நாள் முழுவதும் அவன் புகழ் பாடி ஆடிப்பரம பதம் அடைந்தார்கள் என்பது வரலாறு. இன்றளவும் அவன்மீது ஆழ்ந்த பக்தி கொண்டு ஆழ்ந்த பரவசத்துடன் வாழ்பவர்கள் அநேகம் பேர். அந்த வகையில் பஞ்ச பாண்டவர்களும் கிருஷ்ண பக்தியிலும் ஈடு இணையற்றவர்களாக சிறந்து விளங்கினார்கள்.

மேன்மையான எல்லா விஷயங்களிலும் உன்னதமான மகா வீரபுருஷனாக இருந்த அர்ஜுனன் இனிய நண்பனாகவும் இருந்தான். ஒரு சமயம் அர்ஜூனன் துவாரகை சென்று கண்ணபிரானைக் கண்டு அளாவளாவி மகிழ்ந்தான். அவன் கிருஷ்ணன் மீது அளவு கடந்த அன்பும் பக்தியும் வைத்திருப்பதைப் பற்றிச் சற்றுப் பெருமையுடன் சொல்லிக் கொண்டான். இருந்தாலும் அவனுக்குள் ஒரு சந்தேகம் கிருஷ்ணனைப் பார்த்து, ‘‘கிருஷ்ணா! உன் மீது மிகுந்த பக்தி வைத்திருக்கும் சிறந்த பக்தன் யார்?’’ என்று கேட்டான் சற்று கர்வத்துடன்!

மெல்லிய புன்னகையுடன் அவன் கேள்வியைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன், ‘‘அர்ஜூனா, என் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டு இரவும் பகலும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் உன்னதமான பக்தர்கள் நான்கு பேர் இருக்கின்றனர். ஆனால், அவர்களில் ஒருவர் தான் மிகச் சிறந்த பக்தர்!’’ என்றான். அதைக் கேட்டு திடுக்கிட்ட அர்ஜூனன், ‘‘என்ன, நான்கு பேரா? அவர்கள் யார் யார் என்று சொல்ல முடியுமா?’’ என்று சற்று அசுவரரஸ்யத்துடன் கேட்டான்.

உடனே கிருஷ்ணன் எழுந்து அர்ஜுனனை அணைத்தபடியே அழைத்துக் கொண்டு போய், சாளரத்தின் வழியாகசுட்டிக் காட்டியபடி, கிருஷ்ணன் கூறினான். ‘‘அர்ஜூனா! அதோ அங்கே வாட்ட சாட்டமாய் பீமன் போலக் காட்சி தரும் என் தோட்டக்காரன். கடமையே கண்ணாக செடி கொடிகளைப் பராமரித்து வருகிறான் பார். அவனிடம் சென்று பேசினால் உன் கேள்விக்கு அவன் தகுந்த பதில் சொல்வான்!’’ என்றான். அர்ஜூனன் தோட்டக்காரனை நோக்கிச் சென்றான்.

நரசிங்கன் என்று பெயர்கொண்ட தோட்டக்காரன் அர்ஜூனனுக்கு வணக்கம் கூறி, இன்முகம் காட்டி வரவேற்றான். அந்தத் தோட்டக்காரனின் தோற்றம் அச்சம் தருவதாக இருந்தது. சிவந்த பெரிய கண்கள். பெரிய மீசை. ஆஜானு பாகுவான, பயில்வானைப் போன்ற ஆகிருதி. நீண்ட கைகள் உறையுடன் கூடிய மூன்றடி நீளமுள்ள ஒரு பட்டாக்கத்தியை இடையில் வைத்திருந்தான்.

அவனது கம்பீரமான தோற்றமே அர்ஜூனனுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியது. காய்ந்த சருகுகளையும், புற்களையும் அவன் மென்று கொண்டிருந்தான். அவன் அப்படிப் பெரிய பக்தனாக இருந்தால் இடையில் ஏன் நீண்டவாளை வைத்திருக்கிறான்’ என்று அர்ஜூனன் மனதில் நினைத்தபடியே அவரை அணுகி, ‘‘ஐயா, தோட்ட வேலை பார்க்கும் நீங்கள் ஏன் காய்ந்த புல்லையும் சருகுகளையும் தின்கிறீர்கள்? நீண்ட கொலைவாளை எதற்காக இடையில் தரித்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்டான் அர்ஜூனன்.

‘‘என் இறைவன் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரமாக இருக்கும் கிருஷ்ண பரமாத்மாதான்! ‘பச்சை மாமலை போல் மேனி’ என்று பாகவத சிரோன்மனிகளால் போற்றிப் பாடப்படும் பச்சை நிறம் கொண்டவர் என் பிரபு! பச்சைப்புல், இலை தழைகளில், தாவரங்களில் என் பிரபு இருக்கிறார். அவருக்கு வலிக்குமே என்று பச்சை நிறம் கொண்ட தாவரங்களை நான்சாப்பிடுவதில்லை. என் உணவே காய்ந்த இலை தழை, காய்கனிகள் தான். அதனால் தான் காய்ந்த புல்லையும் சருகுகளையும் விரும்பிச் சாப்பிடுகிறேன்!’’ என்று புன்னகையுடன் கூறினான் தோட்டக்காரன்.

‘அதுசரி, ஐயா. நீங்கள் இம்சை செய்யாதவர் என்றால் பார்ப்பவர்கள் அச்சப்படும் படியாக நீண்ட பட்டாக்கத்தியை ஏன் வைத்திருக்கிறீர்கள்!’ என்று அர்ஜூன் கேட்க. அதற்கு அவன், ‘‘நான் நான்கு பேரை இந்தப் பட்டாக்கத்தியால் கண்ட துண்டமாக வெட்டிக் கூறுபோடுவதற்காக இதை எப்போதும் என் கூடவே வைத்துக் கொண்டிருக்கிறேன்!’’ என்றான் கோபத்தோடு! அவன் பதிலைக் கேட்டு அச்சத்துடன் எச்சிலை விழுங்கிக் கொண்ட அர்ஜூனன் சற்றுப் பதற்றத்தோடு ‘‘யார்… யார் அவர்கள்?’’ என்று கேட்டான்.

மாவீரன் அர்ஜூனனை அந்தத் தோட்டக்காரன் ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னான். ‘‘ராதை என்றொருத்தி இருக்கிறாள். முதலில் அவளை ஒழிக்க வேண்டும். அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. என் பிரபு கிருஷ்ணரை அவள் பலவாறு துன்புறுத்துவதாகக் கேள்விப்பட்டேன். அவரை கொஞ்ச நேரம்கூட நிம்மதியாக இருக்க விடுவதில்லை. எப்போது பார்தாலும் ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று கூப்பிட்டபடி இருக்கிறாள் என் பிரபுவைச் சாப்பிடவோ தூங்கவோ விடுவதில்லை’.

அட, அவருக்குத்தான் ருக்மணி என்றொரு அழகான மனைவி இருக்கிறாளே? அவளுடன் அவரை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. என்ன பெண் அவள்? என் பிரபுவுக்குத் தொல்லை மேல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் மீது கடுங்கோபம் கொண்டிருக்கிறேன். எங்கேயாவது அவளைக் கண்டால் அவளைக் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்வேன்!’’ அவன் குரலில் சினம் பொங்கியது. தோட்டக்காரன் பேச்சைக் கேட்டதும் அர்ஜூனனுக்கு என்னவோ போலாகிவிட்டது. தடுமாற்றத்தோடு, ‘‘அன்பரே’’’ உன் கோபத்துக்கு ஆளான அந்த இரண்டாவது நபர் யாரப்பா?’’ என்று கேட்க,

‘‘நாரத முனிவர்!’’ என்று ‘படீரென்று பதலிறுத்தான். திடுக்கிட்ட அர்ஜூனன், ‘‘என்ன, நாரத முனிவரா? அவரோ திரிலோக சஞ்சாரி! ஓரிடத்தில் இருக்க மாட்டார்? அவர்மீது உங்களுக்கென்ன கோபம்?’’ ‘‘அவர் எங்கேயே சஞ்சாரம் செய்து கொண்டிருக்கட்டும். எதற்காக என் பிரபுவை ஓய்வில்லாமல் ‘நாராயணா’, ‘நாராயணா’ என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அனாதை ரட்சகர், ஆபத்பாந்தவரான என் பிரவு கூப்பிட்ட குரலுக்கு ஓடிப் போய் நிற்கிறார். என் சுவாமிக்கு ஓய் வேயில்லை.

அந்தச் சிவனையோ பிரம்மாவையோ கூப்பிட வேண்டியது தானே? வாய் ஓயாமல் இவரையே கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஓயாமல் தொந்தரவு செய்கிறார். அதனால் என் பிரபு கிருஷ்ண பரமாத்மாவுக்கு சரியான உணவோ, சுகமான நித்திரையோ கிடைப்பதில்லை.

அவர் மூவுலகங்களையும் சுற்றிச் சுற்றி வருபவராம். அவரை என்றைக் காவது பார்த்தேனேயானால் கொல்லாமல் விடமாட்டேன்’’ இதைக் கேட்டதும் அதிர்ந்த அர்ஜூனன் சற்று பயம் கலந்த குரலில், ‘‘நீர் பலி வாங்கத் துடிக்கும் அந்த மூன்றாவது நபர் யாரப்பா?’’ என்று கேட்க, ‘‘திரௌபதி!’’ என்றான் உரத்த குரலில்! அதைக் கேட்டதும் அர்ஜூனனுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது! ‘திருதிரு’வென விழித்தான். ‘‘என்ன திரௌபதியா?’’ என்று தழுதழுத்த குரலில் அச்சத்துடன் அர்ஜூனன் கேட்க, ‘‘ஆமாம்! அவள்தான்! அந்தத் திரௌபதி தான்! பாதகி! என் பிரபுவை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறாள் தெரியுமா? ஒரு சமயம் அவளை கௌரவர் சபையில் மானபங்கம் செய்தார்களாம் அந்த சமயத்தில் தான் என் பிரபு சாப்பிட உட்கார்ந்தார்.

அப்போது என் பிரபுவைக் கூப்பிட்டு உதவும்படி கதறியிருக்கிறாள் அவள். அவள் அலறலைக் கேட்டு உடனே விரைந்தோடி விட்டார். ஏகாதசி நோன்பிருந்து பாரளை செய்யும் போது கெடுத்தாள். அவளுக்குத் தான் ஐந்து கணவன் மார்கள் இருக்கிறார்களே? அவர்களையெல்லாம் கூப்பிட வேண்டியது தானே. அதை விடுத்து என் பிரபுவை சீரழித்திருக்கிறாள்.

அது மட்டுமல்லாமல் மற்றொரு முறை எம்பிரபுவை எப்படிக் கேவலப்படுத்தியிருக்கிறாள் தெரியுமா? மகாபாரதப் போர் நடந்து கொண்டிருக்கும் போது, பீஷ்மர் பஞ்ச பாண்டவர்களைக் கொல்வேன்’ என்று சபதம் செய்தாராம். தவத்தில் சிறந்தவரான அவர் கண்டிப்பாக அவர்களைக் கொல்வார் என்பதை உணர்ந்த திரௌபதி, கண்ணீர் மல்க, கதறி அழுதபடி என் பிரபுவிடம் ஓடி வந்து கணவன் மார்களைக் காப்பாற்றும்படி வேண்டினாளாம்.

என் பிரபுவும் அவள் மீது இரக்கப்பட்டு அன்று இரவு, நடு இரவில் பீஷ்மர் இருக்கும் கூடாரத்திற்கு அவளை அழைத்துச் சென்றாராம். பிதாமகர் பீஷ்மரின் காலில் விழுந்து அவரிடம் ஆசிபெற்றால் அவளது கணவன் மார்கள் காப்பாற்றப்படுவார்கள் அதனால் என் பிரபு அவரிடம் அழைத்துச் சென்ற போது, நள்ளிரவில் திரௌபதியின் காலணி சப்தம் மற்றவர்களுக்குக் கேட்காமல் இருக்க, என் பிரபு அவள் காலணிகளைக் கையில் எடுத்து தனது உததரீயத்தில் மறைத்துக் கொண்டாராம்.

நடுஇரவில் அவள் கிருஷ்ணருடன் சென்றதால் எவரும் தடுக்கவில்லையாம். அவள், என் பிரபுவின் ஆலோசனைப்படி பீஷ்மர் காலில் விழுந்து ‘தீர்க்க சுமங்கலிபவ’ என ஆசீர்வாதம். பெற்று பஞ்ச பாண்டவர்களைக் காப்பாற்றினாளாம். அவள் சுயநலத்திற்காக, தன் காலணிகளை என் பிரபு சுமக்குமாறு செய்த அவளைச் சும்மா விடுவதா! அவளை எங்காவது பார்த்தால் கண்ட துண்டமாக வெட்டிக் கொல்வேன்!’’ என்றான்தோட்டக்காரன் ஆக்ரோஷத்துடன்!

இதைக் கேட்டதும் அர்ஜூனனுக்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தாற் போல் அதிர்ந்தான். சப்த நாடியும் ஒடுங்க, நடுங்கிப்போனான். அவன் கண்களில் அச்சம் படர ஆரம்பித்தது. நான்காவது கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா? என்று யோசித்தான். இருந்தாலும் அவனுக்குள் இருந்த எதிர்பார்ப்பு நான்காவது நபர் யாரெனத் தெரிந்துகொள்வதில் அவன் ஆர்வமே கேட்கத் தூண்டியது.

உடனே சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, சன்னமான குரலில், ‘‘ஐயா! உங்கள் கோபத்துக்கு ஆளாகியிருக்கும் அந்தப் பரிதாபத்துக்குரிய நான்காவது நபர் யார்?’’ என்று கேட்டான். ‘‘அவன்தான் அர்ஜூனன்!’’ என்றான் பெருங்குரலில் கடுங்கோபத்தோடு!‘‘என்ன? அர்ஜூனனா?’’ என்று வீறிட்டவாறே கதி கலங்கிப் போனான் அர்ஜூனன்! தலைமீது இடி விழுந்தாற் போலாயிற்று அவனுக்கு ! மயக்கம் வரும்போல் இருந்தது. அந்த அர்ஜூனன் நான்தான் என்று சொல்லப் பயந்தான்.

‘‘ஏன் கத்தறே? அவனை உனக்குத் தெரியுமா? அவன் எங்கே இருக்கிறான்? சொல்! அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்ல வேண்டும். படுபாவி! அவனது இரண்டு கால்களையும் துண்டு துண்டாக்கி வெட்டிப் பொடிப்பொடியாக்கினாலும் என் கோபம் தீராது! அவன் எங்கே இருக்கிறான் சொல்!’’ என்று கர்ஜித்தான்தோட்டக்காரன்.

‘‘இல்லை. இல்லையில்லை எனக்கு அவனைத் தெரியாது. அவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர எனக்கு எதுவும் தெரியாது!’’ என்று வார்த்தை குழற பொய் சொன்னான் அர்ஜூனன். மேலும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ‘‘ஐயா, உங்களுக்குக் கோபம் ஏற்பட அந்த அர்ஜூனன் என்ன தப்புப் பண்ணினான்!’’ என்று கேட்க,

‘‘மிக மட்டமானவன் அவன்! நண்பன் நண்பன் என்று சொல்லியே என் பிரபு கிருஷ்ணபரமாத்மாவை தேரின் சாரதியாக்கியிருக்கிறான். இந்த அற்பனுக்காக அவர் யுத்தம் முடியும் வரை தேரோட்டியாக இருந்து அவனிட்ட கட்டளைகளையெல்லாம் சிரமேற்கொண்டு சீரழிந்திருக்கிறான்! என் பிரபு. உண்ணாமல் உறங்காமல் அலைந்தார். அதைவிடக் கொடுமை, என் பிரபு அவனை உட்கார வைத்துத் தேரோட்டிச் செல்லும் போதேல்லாம் இவன் தன் காலணியை அணிந்த கால்களுடன் அவர் தோளில் விளையாடியிருக்கிறான்.

என் பிரபுக்கு தோள், கழுத்து, முகம் எல்லாம் காயம். அவனிடம் என் பிரபு சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்திருக்கிறார் தெரியுமா? தேரோட்டச் செய்ததோடு எத்தனை அவமானங்களைப் பண்ணியிருக்கிறான். அவனைச் சும்மா விடுவதா? எங்கோ வெகு தொலைவில் இருக்கிறானாம். அவனைத்தான் ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்! அவனைப் பார்த்தால் கண்ட துண்டமாக வெட்டி, கைகால்களைப் பொடிப்பொடியாக நொறுக்கிக் கொல்வேன்!’’ என்று மூச்சு வாங்க கடுஞ்சினத்துடன் சீறினான்.

இதைக் கேட்டதும் அர்ஜூனனுக்கு உணர்வுகள் அற்றுப் போய் உயிர் போகும் நிலையாகிவிட்டது. கதிகலங்கிப் போனான். இவனிடம் வந்து ஏண்டா கேள்விகள் கேட்டோம்’ என்றாகி விட்டது. உலகில் இப்படியுமா பக்தர்கள் இருப்பார்கள்? அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. சப்தமில்லாம் அவனை விட்டு மெதுவாக நழுவியவன் வேக வேகமாக தன் இருப்பிடமான இந்திர பிரஸ்தம் போய்ச் சேர்ந்தான்.

தான் தப்பிப் பிழைத்தது, தம்பிரான் புண்ணியம் என்றாகி விட்டது அர்ஜூனனுக்கு? தோட்டக்காரனின் அதிரடியான பதில்களால் நிலைகுலைந்து போன அர்ஜூனனுக்குக் கிருஷ்ணன் கூறிய ‘தன் மீது மிகுந்த பக்தி கொண்ட நால்வரையும்’ அதிலும் மிகச் சிறந்த பக்திகொண்ட ஒருவரையும் அறிந்து கொள்ளும் எண்ணம் அவனுக்கு மறுபடியும் தோன்றவேயில்லை. எல்லாம் மாயக்கண்ணனின் லீலை என்பதையும் அவன் உணரவில்லை!

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post தோட்டக்காரனின் கிருஷ்ண பக்தி appeared first on Dinakaran.

Tags : Gardener ,Krishna ,Sriman Narayanan ,Dasavatharas ,Srikrishna ,Paramatma ,Bhagavata ,Aadiparama ,
× RELATED மழலை வரமருளும் பத்மநாப பெருமாள்