×

புண்ணியமருளும் புஷ்ய யோகங்கள்

குரு புஷ்ய யோகம் மற்றும் ரவி புஷ்ய யோகம் என்ற இந்த இரண்டு பருவ காலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம். இவைகள் `புஷ்யார்க யோகம்’ என்றும் அழைக்கப்படுகிறது. புஷ்ய நட்சத்திரம் அதாவது பூசம், 27 நட்சத்திரங்களில் ஒரு முக்கியமான ஸ்தானத்தில் இருக்கக்கூடிய ஒரு நட்சத்திரம். அந்த நட்சத்திரமானது, சம்பத்தை (தன வரவு) கொடுக்கக்கூடிய நட்சத்திரம்.

மேலும், ஞானத்தை கொடுக்கக் கூடிய ஒரு நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. பொதுவாகவே, புஷ்ய நட்சத்திரம் என்பது சம்பத்துக்கு அபிமானி தேவதையான மகாலட்சுமியின் நட்சத்திரமாகப் போற்றப் படுகிறது. மகாலட்சுமி அவதரித்த நட்சத்திரம் என்ற பெருமை புஷ்ய நட்சத்திரத்திற்கு உண்டு. மேலும், பகவான்  ராமனின் அவதார காலத்தில், ராமனுக்கு சகோதரனான, பரதனின் நட்சத்திரமும் புஷ்ய நட்சத்திரம் ஆகும். இவர் மன்மதன் அவதார ஸ்வரூபமாவார். இந்தப் புஷ்ய நட்சத்திரத்தின் மகத்துவத்தை மேலும் கூறவேண்டும் என்றால், இதன் அதிபதி தேவதை, நீதிமானாகப் போற்றப்படக் கூடிய சனி.

பிரகஸ்பதி ஆச்சாரியரின் நட்சத்திரம் இது. குரு, ஞானத்தின் அதிபதி. நவகிரகங்களிலே ஞானத்திற்கு அதிபதியாக இருப்பவர் குரு. புஷ்ய நட்சத்திரம், ஞானத்தை கொடுக்கக்கூடிய நட்சத்திரமாகவும் இருக்கிறது. குரு புஷ்ய யோகம் மற்றும் ரவி புஷ்ய யோகம் என்பதைப் பற்றிக் காணும்போது, குரு வாரத்தில் அதாவது வியாழக்கிழமையில் புஷ்ய நட்சத்திரமும் சேர்ந்து வந்தால், அந்த தினமானது, “குரு புஷ்ய யோகம்’’ என்று சொல்லப்படுகிறது.

“குரு புஷ்ய அமிர்த யோகம்’’ என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல, புஷ்ய நட்சத்திரமானது, ரவி வாரத்தில் (ஞாயிற்றுக் கிழமையில்) வரும்போது, “ரவி புஷ்ய யோகம்’’ என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டுமே விசேஷமான மகத்துவம் நிறைந்தது. குருவானவர், ஞானத்திற்கு அதிபதி. அந்த ஒரு தினத்தில் புஷ்ய நட்சத்திரம் சேரும் போது, அது விசேஷமான பருவ காலமாக அமைகிறது. புஷ்ய நட்சத்திரமே விசேஷமான ஞானத்தைக் கொடுக்கக் கூடியது மற்றும் சம்பத்தை கொடுக்கக்கூடிய நட்சத்திரமாக இருக்கிறது என்று பார்க்கும் போது, அது குருவுடன் சேர்ந்து வரும்போது, குரு புஷ்ய யோகமாக இருக்கும்போது, இன்னும் விசேஷமான பலனைக் கொடுப்பதாக அந்த தினம் அமைகிறது.

அதனால், வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய குரு புஷ்ய யோகதினத்திலே செய்யும் நல்லகாரியங்களுக்கு விசேஷமான பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல, ரவி புஷ்ய யோகம் என்பது “ரவி புஷ்ய அமிர்த யோகம்’’ என்றும் சொல்லப்படுகிறது. இவை இரண்டுமே விசேஷமான பருவகாலங்கள் என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

பொதுவாக, இந்த பருவகாலங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நாம் செய்யக்கூடிய சத்காரியங்கள், தான, தர்மங்கள் ஆகட்டும், பகவத் பூஜை மற்றும் ஆராதனை ஆகட்டும், பகவன் நாம சங்கீர்த்தனம், ஸ்தோத்திரம், ஜெபம், பாராயணம் போன்ற நற்காரியங்கள் ஆகட்டும், தீர்த்த க்ஷேத்திர யாத்திரை, அந்த க்ஷேத்திரங்களில் இருக்கக்கூடிய தீர்த்தங்களில் ஸ்நானம், மூர்த்திகளின் தரிசனம் என அனைத்தும் புண்ணிய காரியங்கள், நற்பலன்களைக் கொடுக்கக்கூடியது என்றாலும், விசேஷமான காலங்களில் செய்வதைப் பொறுத்தும், செய்யும் விதத்தைப் பொறுத்தும் அதன் பலனானது அமைகிறது.

தானம் தரும்போது நாம் எதை தானமாக கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தும், எங்கு தானம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தும், எப்போது தானம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தும், யாருக்கு தானம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தும் அதன் பலனானது மாறுபடுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் நம் முன்னோர்கள், அக்காலத்தில் நல்ல பருவகாலங்கள் வரும்போது அந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்காரியங்களை, பல்லாயிரக்கணக்கான வருடங்கள்.. ஏன்.. பல ஜென்மங்களில் செய்யக்கூடிய புண்ணிய பலன்களை, அந்த மிகக் குறுகிய காலத்திலே அளிப்பதனாலே சாஸ்திரங்கள் கூறிய வகையிலே நடந்து, அதை நன்கு உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.

அதேபோல, செய்யக்கூடிய இடமும் (ஸ்தலம்) முக்கியமானது. நாம் நம் வீட்டிலிருந்து பூஜை செய்கிறோம், பாராயணம் செய்கிறோம் மற்றும் ஜெபம் செய்கிறோம். அதைக் காட்டிலும், புண்ணிய பலன்கள், நதிதீரத்திலே, புண்ணிய தீர்த்தங்களின் கரையிலே, க்ஷேத்திரங்களிலே, குரு மகாசந்நிதானத்திலே மற்றும் பகவானின் சந்நிதானத்தில் செய்யும்போது பல மடங்கு மாறுபடுகிறது.

“அனந்தம் விஷ்ணு ஸந்நிதௌ’’

விஷ்ணுவின் சந்நிதானத்தில் செய்யப்படுகின்ற ஜெபம், பாராயணம், தானம் போன்றவற்றிற்கு அனந்த மடங்கு பலன் (பல மடங்கு) என்று சொல்லப் பட்டிருக்கிறது. நற்காரியங்கள் பல உண்டு. அதிலும், செய்யக் கூடிய தானங்கள், பகவத் பூஜை, நாமசங்கீர்த்தனம், ஜெபங்கள், கதாஸ்ரவணம் முதலியன விசேஷமான பலன்களைக் கொடுக்கக் கூடியது. ஆக, எந்த காரியத்தை செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் பலன் மாறுபடுகிறது. புண்ணிய பலன் செய்யும் இடத்தை பொறுத்தும், காலத்தைப் பொறுத்தும், எதைச் செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

தானங்கள் என்று எடுத்துக் கொண்டால், அதை ஸ்வீகாரம் செய்பவர்களைப் பொறுத்தும் பலனானது மாறுபடுகிறது. தானத்தை பெறுபவர்களின் தபோ சக்தி, அவர்களின் ஜபசித்தி, அனுஷ்டானம், நல்லொழுக்கம் (சீலம்) இதையெல்லாம் பொறுத்து தானத்தின் பலனானது மாறுபடுகிறது. இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து புண்ணியத்தை சம்பாதிக்கக் கூடிய ஒரு ஆசை, ஒரு வேகம், தாகம் எல்லாம் நம் பெரியவர்களுக்கு இருந்திருக்கிறது.

இப்போது நாம், காசு சம்பாதிக்கத்தான் பார்க்கிறோம், எந்த வங்கியில் போட்டால் எவ்வளவு வட்டி கிடைக்கும், எந்த மியூச்சுவல் ஃபண்டில் போட்டால் அதிகமாக பணம் கிடைக்கும், எங்கு நிலம் வாங்கினால் பல மடங்கு அதிகம் பலன் கிடைக்கும் என்றெல்லாம் மட்டுமே யோசிக்கிறோம். நாம் பணத்தின் பின்னால் சென்று கொண்டு இருக்கிறோம்.

அந்தக் காலத்தில் பெரியவர்கள், புண்ணியத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். எந்த காலத்தில் செய்தால் புண்ணியம் கிடைக்கும். எந்த தேசத்தில் செய்தால் புண்ணியம் கிடைக்கும். எந்த நேரத்தில், எந்த இடத்தில் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என அறிந்து, அதைப் போன்ற தேசங்கள், பருவ காலங்கள் அமையும் போது புண்ணியங்களை, பகவான் வாரி வழங்க காத்துக் கொண்டிருக்கிறான் என உணர்ந்து சத்காரியங்களை நம் முன்னோர்கள் செய்து வந்துள்ளனர்.

அதேபோல, ரவி புஷ்ய யோகம் அதாவது ஞாயிற்றுக் கிழமையும், புஷ்ய நட்சத்திரமும் சேர்ந்து வருகின்ற காலத்தில், என்ன புதிதாக வாங்குகிறோமோ, அதனோடு மகாலட்சுமியின் சாந்தித்யம் இருக்கிறது என்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மகாலட்சுமியின் சாந்நித்யம் இருப்பதால், பல நாட்கள் நிலைத்திருக்கக்கூடிய சாஸ்வதமான சம்பத்தாக அமைகிறது என்று ரவி புஷ்ய யோகத்தைப் பற்றி சொல்லப்படுகிறது. அன்றைக்கு நாம் வாங்கக் கூடிய வாகனங்கள், ஆபரணங்கள், தொடங்கக்கூடிய தொழில்கள் நன்மை பயக்கும் வகையில் ரவி புஷ்ய யோகத்திற்கும் அப்பேர்பட்ட பலன்கள் உண்டு. இதெல்லாம் லௌகீகமான பலன்கள்.

ஆனால், பரலோகத்திற்கும் நமக்கும் சுகம் வேண்டும். நமக்கு சாஸ்வதமான அழியாத சுகம் வேண்டும், அதுதான் `மோட்சம்’ என்னும் பிறப்பற்ற நிலை. அதையடைய வேண்டுமென்றால், நமக்கு ` ஞானம்’ உண்டாக வேண்டும். நம்மிடம் பக்தி பிறக்க வேண்டும். நமக்கு குருவின் ஆசி ஏற்பட வேண்டும்.
இந்தப் பருவகாலம் ஞானத்தின் பால் தாகம் இருப்பவர்களுக்கு, மோட்ச மார்க்கத்தை வேண்டுபவர்களுக்கு, நிலையான சுகத்தை விரும்புபவர்களுக்கு, இது விசேஷமான பருவகாலம் என்று சொல்லப்படுகிறது.

இந்த தினத்தில் செய்யக்கூடிய பாராயணம், பகவத் ஆராதனை, பூஜை மற்றும் ஜபங்கள், செய்யக்கூடிய தானங்கள் எல்லாவற்றுக்குமே விசேஷமான பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. அன்று செய்யக்கூடிய பாராயணம், முக்கியமாக விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், வேத சூக்தங்களின் பாராயணம், மகா காவியங்கள், குரு சரித்திரங்களை மகிமைகளை உரைக்கும் கிரந்தங்களின் பாராயணம் என அனைத்தும் விசேஷமானது. அபரிமிதமான புண்ணியத்தை, சுகத்தை, ஞான சம்பத்தை கொடுக்கக்கூடிய தினம்.

திருமணம் ஆகாதவர்களுக்கு அப்பேர்ப்பட்ட பாக்கியத்தை கொடுக்கக்கூடியது, புத்திர சம்பத்தை கொடுக்கக்கூடியது என விசேஷமான பலன்களைக் கொடுக்கக் கூடியதாக அந்த தினம் அமைகிறது.

தொகுப்பு: S. லட்சுமிபதிராஜா

The post புண்ணியமருளும் புஷ்ய யோகங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அறிவா? உணர்ச்சியா? எது தீர்மானிக்கிறது?