×

மனம், உடலை ரெஃப்ரெஷ் செய்யும் பரதம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘எனக்கு படிக்க பிடிக்கும். ஸ்கூல் டாப்பர். சி.ஏ படிக்க வேண்டும் என்பது என் கனவு. +2 முடிச்ச பிறகு நேரடியாக சி.ஏவிற்கான பயிற்சி எடுத்தேன். அதில் தேர்ச்சியும் பெற்றேன். அதனைத் தொடர்ந்து அந்த துறையில் இப்போது மேனேஜர் பதவி வகித்து வருகிறேன். நான் நினைத்த அனைத்தும் எனக்கு ஒவ்ெவான்றாக எந்த தடையும் இல்லாமல் நிறைவேறியது. என் திருமணம் உட்பட. ஆனால் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை நான் தவறவிட்டு இருக்கேன் என்று என் மனது உறுத்திக் கொண்டே இருந்தது.

என்னுடைய வாழ்க்கை வேலை என்ற ஒரே பக்கம் மட்டும் பயணித்துக் கொண்டு இருப்பது போல் உணர்ந்தேன். எனக்காக ஒரு சில மணி நேரம் செலவிட விரும்பினேன். அது என் மனசுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும் என்று நினைச்சேன்’’ என்று கூறும் மஹிதா…. பல ஆண்டுகள் கழித்து தன் மனசுக்கு மிகவும் நெருக்கமான நடனத்தை தன் இரண்டாவது ெதாழிலாக தேர்வு செய்துள்ளார். இவரின் முதல் மேடை சென்னையில் மார்கழி இசைத் திருவிழாவின் போது அரங்கேறியுள்ளது.

‘‘என் அம்மா, அப்பா இருவருமே கலைத் துறையை சேர்ந்தவங்க. அம்மா பரதக்கலைஞர். அவங்க சொந்தமாக நாட்டியப் பள்ளி ஒன்றை நிர்வகித்து வந்தாங்க. அப்பாவுக்கும் இசை மேல் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு என்பதால், நான் அந்த சூழலில்தான் வளர்ந்தேன். அம்மாவின் நடனப் பள்ளியில் நடனம் கற்றுக் கொண்டேன். தனியாக பாட்டும் பயின்றேன். அம்மா நடனம் குறித்த புத்தகம் எழுதுவது மற்றும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்ததால், அவங்களால் நடனப் பள்ளியை தொடர முடியவில்லை.

ஆனாலும் எங்களுக்கு வீட்டில் நடனப் பயிற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அம்மாவின் நடன நிகழ்ச்சியில் நானும் சின்னச் சின்ன நடனம் செய்திருக்கிறேன். பாட்டு, நடனம் இரண்டுமே நான் கற்றுக் கொண்டாலும், நடனத்தின் மேல்தான் எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது. காரணம், நடனத்தில் கொடுக்கக்கூடிய முகபாவனைகள் மற்றும் அபிநயங்கள் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. சி.ஏ படிக்க ஆரம்பிச்ச போது என்னால் நடனத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

சொல்லப்போனால், அதன் பிறகு முற்றிலும் நடனப் பயிற்சியினை நான் மேற்கொள்ளவே இல்லை. சி.ஏ பொறுத்தவரை கொஞ்சம் ஹார்டு வொர்க் ெசய்யணும். அப்பதான் தேர்ச்சிப் பெற முடியும். கிட்டத்தட்ட எட்டு வருஷம் படிப்பு, வேலை என்று காலம் கடந்துவிட்டது. நாள் முழுக்க வேலை வேலை என்று நாம் எதை நோக்கி பயணிக்கிறோம்னு ஒரு நாள் திடீரென்று எனக்கு யோசனை வந்தது. சி.ஏ படிக்க வேண்டும் என்பது என் கனவுதான். ஆனால் அதைத்தாண்டி என் மனசுக்கு நெருக்கமான விஷயத்தை நான் செய்ய தவறிட்டேனோன்னு தோணுச்சு. யோசித்து பார்த்த போது, ரொம்ப பிடிச்ச நடனத்தை நான் விட்டுட்டேன்னு புரிந்தது.

அம்மாவிடம் இது பற்றி பேசினேன். அவங்க சொன்ன ஒரே விஷயம் உன்னால் நேரம் ஒதுக்க முடியும்னா மீண்டும் நடனப் பயிற்சி எடுன்னு சொன்னாங்க. நம்மிடம் நேரம் நிறைய உள்ளது. அதை நாம் எப்படி சரியாக செயல்படுத்தணும்னுதான் நமக்கு தெரியல. நான் முதலில் செய்த காரியம் எனக்கான நேரத்தினை பிளான் செய்தேன். வேலையை முடிச்சிட்டு தினமும் நடனம் பிராக்டீஸ் செய்யணும்னு முடிவு செய்தேன். கலை சார்ந்த விஷயத்தில் நாம் கவனம் செலுத்தினால் கண்டிப்பா அது நம் மனம் மற்றும் உடலை ரெஃப்ரெஷ் செய்யும்’’ என்றவர் மீண்டும் நடனப் பயிற்சி மேற்கொண்டது பற்றி விவரித்தார்.

‘‘தினமும் வேலை முடிந்த பிறகு நேரா அம்மா வீட்டிற்கு சென்றுவிடுவேன். அங்கு இரண்டு மணி நேரம் நடனப் பயிற்சி. தினம் ஒரு புது நடன அசைவுகள் கற்றுக்ெகாள்ளும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. மனசும் ரிலாக்ஸ் ஆனது. சொல்லப்போனால், முன்பை விட என்னுடைய வேலையில் அதிக கவனம் செலுத்த முடிந்தது. அதே சமயம் தினமும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் நான் தீர்க்கமா இருந்தேன்.

ஆரம்பத்தில் வேலை, மறுபடியும் இங்கு வந்து நடனப் பயிற்சின்னு கொஞ்சம் டயர்டாதான் இருந்தது. ஆனால் ஒரு வாரத்தில் என்னுடைய உடல் மற்றும் மனம் அதற்கு பழகிவிட்டது. முன்பை விட நான் ரொம்பவே சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்தான் நான் முழு மூச்சாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். அப்போது கூட நான் மார்கழி உற்சவத்தில் மேடை ஏறுவேன்னு நினைக்கல. ஒரு வருடம் பயிற்சி எடுக்கலாம், அதன் பிறகு மேடை ஏறலாம்னுதான் நானும் அம்மாவும் முதலில் திட்டமிட்டு இருந்தோம்.

ஆனால் அப்பாதான்… எதற்கு ஒரு வருடம்னு நாட்களை தள்ளிப் போடணும். உன்னால் முடியும்னு நம்பிக்கை இருந்தால், மார்கழி திருவிழாவிலேயே உன் நடனத்தை அரங்கேற்றலாமேன்னு சொன்னார். ஆரம்பத்தில் என்னால் முடியுமான்னு கொஞ்சம் பயந்தேன். அம்மாவும் அப்பாவும்தான் முடியும்னு சொல்லி எனக்கு தைரியம் கொடுத்தாங்க. நான் நினைத்தபடியே மார்கழி திருவிழாவில் என்னுடைய முதல் மேடை நடன நிகழ்ச்சி அரங்கேறியது.

இலக்கியத்தில் பரதம்… அம்மாவிற்கு ரொம்பவே பிடித்த பிராஜக்ட். அவங்க இலக்கியத்தினை பரத வடிவமாக கொடுக்க விரும்பினாங்க. திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற இலக்கியத்தில் இருந்து ஒரு கான்செப்ட்டை எடுத்து அம்மா அதற்கு பரதம் செய்தாங்க. 1989 முதல் 2000 வரை இலக்கியங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட நடனங்களை செய்திருக்காங்க. அதில் இருந்து ஒரு ஆறு படைப்பினை தேர்வு செய்து இந்தக் காலத்திற்கு ஏற்ப புதிய கான்செப்டாக மாற்றி அமைக்கலாம்னு நானும் அம்மாவும் முடிவு செய்தோம்.

அம்மா செய்ததையே நான் மறுபடியும் செய்யாமல், அதை வேறு கண்ேணாட்டத்தில் கொடுக்க விரும்பினேன். மேலும் என்னுடைய குருவான அம்மாவிற்காக, அவங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்யும் போது, ஒரு சிஷ்யையா இதன் மூலம் மரியாதை அளிக்க விரும்பினேன்’’ என்றவர், தான் தேர்வு செய்த நடனம் மற்றும் அதில் அவர் என்ன கருத்தினை வெளிப்படுத்தினார் என்பதை விவரித்தார்.

‘‘திருப்புகழ், முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அதில் இருந்து இரண்டு பத்தியை தேர்வு செய்தோம். முருகன் குறித்த பத்தி என்றாலும், முருகனைப் பற்றி இல்லாமல் ராமாயணம் மற்றும் சிவன் குறித்த பத்திக்கு நடனம் அமைத்தோம். அடுத்து திருமுருகாற்றுப்படையில் முருகன் குறித்த நடனம். திருவேங்கைகலம்பகம், இதில் அரசவை பெண்கள் குறித்து பத்தியை தேர்வு செய்தோம். ராஜா ஒருவர் வேடனின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்.

அவரின் விருப்பத்தினை ஏற்றுக் கொள்ளாத வேடன், ராஜாக்கள் தங்கள் மனைவியினை நடத்திய விதம் குறித்து கூறுவார். உதாரணத்திற்கு ஹரிச்சந்திரர் தன் மனைவியை வீட்டு வேலைக்காக அனுப்புவார், நலன் மகாராஜா தன் மனைவியான தமயந்தியை நிர்கதையாக விட்டு சென்றிடுவார். பஞ்சபாண்டவர்கள் விளையாடிய சூதாட்டத்தில் திரௌபதி பாதிக்கப்பட்டார்.

பரிபாடலில் கவிஞர் ஒவ்வொரு இசையை மற்றவற்றோடு ஒப்பிட்டு பார்ப்பது. கடைசியாக பிள்ளைத்தமிழில், ஒரு மனிதனின் குணாதிசயங்களை மீனாட்சி அம்மன் குழந்தை வடிவில் கூறுவது என இலக்கியங்களில் இருந்து ஒரு பத்தியினை தேர்வு செய்து அதனை நடனமாக அமைத்தோம். ஒவ்வொரு நடனம் அரங்கேறும் முன் அம்மா அதற்கான விளக்கத்தையும் அளிப்பார். இதனால் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை பார்வையாளர்கள் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

அம்மாவுடன் சின்ன வயசில் நான் பல நிகழ்ச்சியில் நடனமாடி இருந்தாலும், இந்த மார்கழி திருவிழா எனக்கு ரொம்பவே முக்கியமானது. நான் முதல் முறையாக என் நடனத்தை மேடையில் தனியாக நிகழ்த்தி இருக்கேன். இந்த மார்கழியில் நான் மேடை ஏறுவேன்னு முதலில் திட்டமிடவில்லை. ஆனால் அது நடந்திருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு மார்கழி திருவிழாவின் போதும், ஒரு நடன நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்து இருக்கேன். அதற்கான பயிற்சியினை மார்கழி திருவிழா முடிந்ததும் துவங்க இருக்கிறேன்’’ என்றார் மஹிதா சுரேஷ்.

தொகுப்பு: ப்ரியா

The post மனம், உடலை ரெஃப்ரெஷ் செய்யும் பரதம்! appeared first on Dinakaran.

Tags : Bharatham ,kumkum ,CA. ,Dinakaran ,
× RELATED குதிகால் வலி