×

மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த எந்த தடையும் இல்லை : ஐகோர்ட் தீர்ப்பு

மதுரை : மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த எந்த தடையும் இல்லை என்று மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட சிலர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அவனியாபுரத்தில் பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.இது தொடர்பான ஒரு வழக்கில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடங்கிய குழு அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டில், அனைத்து சமூகத்தினரையும் கொண்ட விழா கமிட்டியே ஜல்லிக்கட்டு நடத்துகிறது. அவனியாபுரத்தில் மட்டும் மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது. ஜனவரி 15ம் தேதி நடக்கவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, அனைத்து சமூகத்தினரையும் கொண்ட குழு அமைத்து நடத்துமாறு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து சமாதான கூட்டம் நடத்தி, அனைவரின் கருத்துக்களையும் கேட்டு அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, “ஆர்டிஓ தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. அனைத்து சமூகத்தையும் சேர்ந்த 98 பேர் பங்கேற்றனர். சட்டம் – ஒழுங்கு பிரச்னையை தவிர்த்திடும் வகையில், மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டை நடத்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை எனப் பெரும்பான்மையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.ஜல்லிக்கட்டு நடத்த அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவும், ஆலோசனைகளை வழங்க அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைத்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக” கூறப்பட்டது.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு,”கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை. போட்டியின் போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ பிரச்சினை, இடையூறு செய்யக்கூடாது. இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறோம்,”இவ்வாறு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

The post மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த எந்த தடையும் இல்லை : ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai District Administration ,Municipal Corporation ,Avaniyapuram jallikattu ,Madurai ,Kalyanasundaram ,Avaniyapuram ,Court ,Madurai District Administration and Corporation ,Dinakaran ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...