×

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. அதோடு, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று 12.01.2024: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது.

நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 12.01.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.நாளை தென்மேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : South Tamil Nadu ,Met Office ,Chennai ,Chennai Meteorological Department ,Tamil Nadu ,
× RELATED தென்தமிழகம், கேரளா உள்பட...