×

கோடநாடு வழக்கு!: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப்பதிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப்பதிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமின்றி இந்த வழக்கில் தன்னுடைய சாட்சியத்தை பதிவு செய்வதற்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு பதிலாக, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து தனது இல்லத்தில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்டு சாட்சியப்பதிவுக்காக வழக்கறிஞர் கார்த்திகைபாலனை வழக்கறிஞர் ஆணையராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த ஜனவரி 4ம் தேதி எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சாட்சியப்பதிவானது செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆணையர் கார்த்திகைபாலன், எடப்பாடி பழனிச்சாமியின் சாட்சியப்பதிவு நடைமுறையை முடித்துவிட்டதாகவும், 6 ஆவணங்கள் அடங்கிய சாட்சியப்பதிவு குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

The post கோடநாடு வழக்கு!: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப்பதிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Madras High Court ,Chennai ,Chennai High Court ,Kanagaraj ,Dhanapal ,Kodanadu ,Kodanad ,AIADMK General Secretary ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...