×

கோடாலி கருப்பூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 60 மாடுகள் தீயணைப்பு துறையினர் மீட்டனர்-பொதுமக்கள், உரிமையாளர்கள் மகிழ்ச்சி

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் தங்களது கால்நடைகளை அருகிலுள்ள கொள்ளிட ஆற்றுப் பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பி பின்னர் வீட்டுக்கு ஓட்டி வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்ற 60க்கும் மேற்பட்ட பசுமாடுகள் கொள்ளிட ஆற்றின் மணல் திட்டு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. இதனிடையே தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கொள்ளிட ஆற்றின் ஒரு லட்சம் கன அடி நீர் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் திரும்பி கரைப் பகுதிக்கு வராமல் அங்கேயே தங்கிவிட்டது.இதில் அச்சமடைந்த விவசாயிகள் மேடான பகுதியில் சிக்கித் தவிக்கும் மாடுகளை மீட்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் கொள்ளிடம் கரைப் பகுதிக்கு சென்று நீர் மோட்டார் பொருந்திய படகு மூலம் மாடுகள் இருக்கும் மணல் திட்டு பகுதிக்கு விவசாயிகளை அழைத்து சென்றனர்.. சம்பவ இடத்திற்கு வந்த ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு துறை ஆய்வாளர் அம்பிகா மீட்பு பணியில் தீவிரம் காட்டினர். இரவு நேரமாகிவிட்டதால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் அனைவரும் மீண்டும் கரைப் பகுதிக்கு படகு மூலம் வந்தடைந்தனர். சம்பவ இடத்தில் வருவாய் ஆய்வாளர் தமிழரசன், கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் தா.பழூர் காவல்துறையினர் ஆகியோர் மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்டனர். மாடுகளை பத்திரமாக மீட்டு கொடுத்த தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் பொதுமக்கள், மாட்டின் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்….

The post கோடாலி கருப்பூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 60 மாடுகள் தீயணைப்பு துறையினர் மீட்டனர்-பொதுமக்கள், உரிமையாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kodali Karupur ,Kodali ,Meetaner ,T.D. Palur ,Ariyalur District ,Godalikaruppur ,Palur ,Meetener-Civilians ,Dinakaran ,
× RELATED கோடாலி கருப்பூர் கிராமத்தில் விவசாய...