×

முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்வு; அரசாணை வெளியீடு..!!

சென்னை: முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது. எம்.டி., எம்.எஸ். மற்றும் பிஜி டிப்ளமோ ஆகிய பிரிவுகளில் தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முதுநிலை படிப்புகள், சர்வீஸ் கேண்டிடேட் மற்றும் நான் சர்வீஸ் கேண்டிடேட் என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு வருகிறது. சர்வீஸ் கேண்டிடேட் என்பவர்கள் அந்த மருத்துவ கல்லூரியிலேயே படித்து பணியாற்றுபவர்கள்.

நான் சர்வீஸ் கேண்டிடேட் என்பவர்கள் வெளியில் இருந்து படிக்க வருபவர்கள். அவ்வாறு வெளியில் இருந்து படிக்க வரும் நான் சர்வீஸ் கேண்டிடேட் மாணவர்கள், தங்களின் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டிருந்தது. படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லாதோர் படித்ததற்கான கட்டணமாக ரூ.40 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டும் என்று முன்பு விதி இருந்தது.

இந்நிலையில், முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதியை தளர்த்தி தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் காலம் 2 ஆண்டுகள் என்பதை ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லாதோர் ரூ.40 லட்சத்துக்கு பதில் ரூ.20 லட்சம் கட்டினால் போதும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பிஜி டிப்ளமோ முதுகலை படிப்பவர்களில் பட்டயப்படிப்பவர்களும் 2 ஆண்டுகளுக்கு பதிலாக ஓராண்டு காலம் பணியாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணியாற்ற விரும்பாதவர்கள், 10 லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று திருத்திய விதிகள் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.

The post முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்வு; அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,M. D. ,M. S. ,Tamil Nadu Government Medical Colleges ,Dinakaran ,
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...