×

திருப்புவனம் பகுதியில் மாட்டுப் பொங்கல் விழாவிற்காக கயிறு தயாரிப்பு பணி மும்முரம்

திருப்புவனம் : திருப்புவனத்தை அடுத்த கீழடி அருகே சொட்டதட்டி, பனையூர், சயனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, மாடுகளுக்கான கயிறு தயாரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
பொங்கல் திருநாளன்று விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குளிக்க வைத்து கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி பொட்டு வைத்து மாலை சூடி, புது துண்டு வேட்டி அணிவித்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள். அன்றைய தினம் பசுமாடு, எருமை மாடு, ஜல்லிகட்டு காளை உள்ளிட்டவற்றிற்கு மூக்கணாங்கயிறு, பிடி கயிறு, கழுத்து கயிறு உள்ளிட்ட பழைய கயிறுகளை மாற்றி புது கயிறுகளை அணிவிப்பது வழக்கம்.

கீழடி அருகே சொட்டதட்டி, சயனாபுரம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த பட்சம் 200 பேர் முதல் 300 பேர் வரை கயிறு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இங்கு தயாரிக்கும் கயிறு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கரண்ட் பில், இடவாடகை உள்ளிட்ட எந்த முதலீடும் இன்றி விவசாய தொழிலாளர்கள் இணைந்து கருவேல மரகாட்டின் அடியில் கயிறு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து நூல் பண்டல்களை மொத்தமாக வாங்கி வந்து தொழிலாளர்களிடம் கொடுத்து விடுகின்றனர்.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாடுகளுக்கான கயிறு தயாரிப்பு பணி வெகுவாக நடைபெறும். மற்ற நாட்களில் குழந்தைகளுக்கான தொட்டில் கயிறு, திருமாங்கல்ய கயிறு, கன்று குட்டிகளுக்கு முகத்தில் மாட்டப்படும் வாய்க் கூடு கயிறு என பல்வேறு கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. 4 தொழிலாளர்கள் கொண்ட குழு இணைந்து கயிறு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.
நாள் ஒன்றுக்கு ஒரு தொழிலாளிக்கு 300 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறுகின்றனர். பச்சை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற நிற கயிறுகள் தயாரித்தாலும் வெள்ளை நிற கயிறுகள் அதிகமாக தயாரிக்கின்றனர்.

The post திருப்புவனம் பகுதியில் மாட்டுப் பொங்கல் விழாவிற்காக கயிறு தயாரிப்பு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Matup Pongal festival ,Sottathathi ,Panaiyur ,Sayanapuram ,Keezadi ,Pongal ,Pongal festival ,
× RELATED தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது?...