×

குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணிகளுக்காக பேட்டரியில் இயங்கும் 10 லோடு ஆட்டோக்கள்

*கோவை மாநகராட்சியில் அறிமுகம்

கோவை : கோவை மாநகராட்சியில் பேட்டரியில் இயங்கும் 10 லோடு ஆட்டோக்களை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். சமுதாய பொறுப்பு நிதியின்கீழ் தனியார் வங்கி மூலம் தலா 5 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கும் பணிகளுக்காக பேட்டரியில் இயங்கும் 10 லோடு ஆட்டோக்கள் வாங்கப்பட்டது. இதன் தொடக்க விழா கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதனை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் தற்போது 10 பேட்டரி லோடு ஆட்டோக்கள் துவக்கப்பட்டது. இந்த வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். மாநகராட்சியில் 68 சதவீத அளவில் சாலை பணிகள் முடிக்கப்பட்டது. 760 பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 445 சாலை பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. பில்லூர் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. தற்போது டெங்கு பரவும் சூழ்நிலை இருப்பதால் சுகாதார மையங்களில் கூடுதல் டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கபட்டு உள்ளனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தபட்டு உள்ளனர்.

பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிக வேகமாக இயல்பு நிலை திரும்பியது. பிளாஸ்டிக் பாட்டில், சாக்கடை அடைத்திருந்த காரணத்தினால்தான் மழை நீர் சாலையில் தேங்கியது. பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 14ம் தேதி வரை வழங்கப்படும். நிதி பிரச்சினை இருந்தும், யாரும் விடுபடக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

கோவையில் அதிக மழை வந்தால் அதை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். எந்தெந்த பகுதியில் பாதிப்பு இருக்குமோ அங்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கொரோனா தொற்றை பொருத்தவரை கேரளாவில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருகிறோம். விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணிகளையும் கண்காணித்து வருகிறோம். பொங்கல் மதுபான விற்பனை இலக்கு, வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர்கள் சிவகுமார், செல்வசுரபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணிகளுக்காக பேட்டரியில் இயங்கும் 10 லோடு ஆட்டோக்கள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Corporation ,Coimbatore ,Minister ,Muthuswamy ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்