×

ஊட்டி, குந்தா தாலுகாவில் 420 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடி மதிப்பிலான பட்டா வழங்கல்

*சுற்றுலாத்துறை அமைச்சர், எம்பி., ஆகியோர் வழங்கினர்

ஊட்டி : ஊட்டி இளம் படுகர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 420 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடி மதிப்பிலான வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தமிழக அரசு நீலகிரி மாவட்டத்தில் நத்தம் நிலங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

நேற்று ஊட்டி மற்றும் குந்தா ஆகிய இரு தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் நத்தம் நிலங்களில் வசிக்கின்ற மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஊட்டி வட்டத்தில் 149 பயனாளிகளுக்கு ரூ.18.11 லட்சம் மதிப்பிலும், குந்தா வட்டத்தில் 271 பயனாளிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பிலும் என மொத்தம் 420 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடி மதிப்பிலான பட்டாக்கள் வழங்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி வரவேற்றார். இவ்விழாவில், பயனாளிகளுக்கு பட்டா வழங்கி தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தலைமையில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, ஆண்களுக்கு நிகராக பெண்களின் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்திலும் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு மகளிர் மாதந்தோறும் தலா ரூ.1000 பெற்று பயன்பெற்று வருகின்றனர்.தமிழ்நாடு முதலமைச்சர், நேற்று முன்தினம் தினம் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

மாதந்தோறும் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் மகளிர்களுக்கு ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது பொங்கல் திருநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக முன்னதாகவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஊட்டி மற்றும் குந்தா வட்டங்களை சேர்ந்த 420 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடி மதிப்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஏராளமான திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். எனவே, பொதுமக்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு தங்களின் முழு ஆதரவை வழங்க வேண்டும், என்றார்.

ெதாடர்ந்து விழாவில், நீலகிரி எம்பி., ராசா பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு,தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் கூடலூர் பகுதியில் 421 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி மதிப்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 657 மாணவ,மாணவிகளுக்கு ரூ.84 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இவ்விழாவின் வாயிலாக குந்தா மற்றும் ஊட்டி வட்டங்களைச் சேர்ந்த சுமார் 420 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனை ஒப்படைக்கான இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டது.
இதேபோன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி, ஊட்டி நகர்மன்றத் தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார்,தாசில்தார்கள் சரவணகுமார் (ஊட்டி), கலைச்செல்வி (குந்தா),மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ், பேரூராட்சித் தலைவர்கள் கௌரி (சோலூர்), சந்திரலேகா (பிக்கட்டி), சத்தியவாணி (கீழ்குந்தா) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டி, குந்தா தாலுகாவில் 420 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடி மதிப்பிலான பட்டா வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Patta ,Kunta Taluk ,Ooty ,Minister of Tourism ,Young ,Padukhar Sangha Mandapam ,Revenue and Disaster Management Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி