×

மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2ம் கட்டமாக ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட ஒன்றிய குழு தூத்துக்குடி வருகை..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2ம் கட்டமாக ஆய்வு செய்வதற்காக ஒன்றிய குழுவினர் 7 பேர் தூத்துக்குடி வருகை தந்திருக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17, 18ம் தேதிகளில் பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. குடியிருப்புகள் மட்டுமின்றி விவசாய நிலங்களும் அதிகப்படியான சேதங்களை சந்தித்தது. இதையடுத்து ஒன்றிய குழு ஏற்கனவே மழை, வெள்ளம் வடிவதற்கு முன்பாக ஒருமுறை ஆய்வு செய்தது. அதனை தொடர்ந்து இன்று 2ம் கட்டமாக ஆய்வுக்காக ஒன்றிய குழுவினர் தூத்துக்குடி வந்துள்ளனர்.

கே.பி.சிங் தலைமையிலான குழுவினர், ரங்கநாத் தங்கசாமி, டாக்டர் பொன்னுசாமி, ராஜேஷ் திவாரி, பாலாஜி, விஜயகுமார், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர். ஒன்றிய குழுவினர் 7 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர். முதற்கட்டமாக தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றிய குழுவினர் ஆய்வு கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்தெந்த பகுதிகள் அதிகமாக சேதமடைந்துள்ளது என்பது குறித்து தூத்துக்குடி ஆட்சியரிடம் கேட்டறிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து 2 குழுவாக பிரிந்து ஒரு குழுவானது மறவன் மடம் வழியாக வல்லநாடு, திருவைகுண்டம் வரை ஆய்வு செய்கிறது. மற்றொரு குழுவானது முதற்கட்டமாக தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனை, விவசாய நிலங்கள், ஏரல் பகுதிகள் வழியாக திருச்செந்தூர் வரை ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்கு பிறகு இவர்கள் அறிக்கை தயாரிப்பார்கள்.

The post மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2ம் கட்டமாக ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட ஒன்றிய குழு தூத்துக்குடி வருகை..!! appeared first on Dinakaran.

Tags : Union ,Tuticorin ,Toothukudi ,Thoothukudi district ,Tuthukudi district ,Dinakaran ,
× RELATED மிக கனமழைக்கான எச்சரிக்கை:...