×

உரிய முறைப்படி ராமர் சிலை நிறுவப்படாவிட்டால் அந்த பகுதியே அழியும் ஆபத்து : சங்கராச்சாரியார்கள் எச்சரிக்கை

லக்னோ : அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக முக்கிய அரசியல் கட்சிகள் அறிவித்து வரும் நிலையில், நாட்டின் முக்கியமான 4 இந்து மடங்களின் சங்கராச்சாரியார்களும் விழாவை புறக்கணித்துள்ளனர். முழுமையாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலுக்கு இந்து மத முறைகளை பின்பற்றாமல் குடமுழுக்கு நடத்தப்படுவதாக சங்கராச்சாரியார்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கான திறப்பு விழா 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா இந்து சனாதன தர்மத்திற்கு விரோதமாக நடத்தப்படுவதாக உத்தராகண்ட் ஜோதிஸ்ப்பீடத்தின் சங்கராச்சாரியார் அவின் முக்தேஸ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார். யாருக்கு எதிராகவும் தாங்கள் செயல்படவில்லை என்றாலும் இந்து மத விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதும் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதும் தங்கள் கடமை என்று அவர் கூறியுள்ளார்.

முழுமையாக கட்டி முடிக்கப்படாத கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படுவதும் அங்கு ராமர் சிலையை வைப்பதும் தவறான வழிமுறை என குறிப்பிட்டுள்ள அவர், ராமர் கோவில் திறப்பு விழாவை இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று சாடியுள்ளார். இதே போல் இந்து மத வேதங்களுக்கு எதிராக திறப்பு விழா நடைபெறுவதாகவும், இத்தகைய விழாவில் பங்கேற்க தனது கவுரவம் இடம் தராது என்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நிஷ்சலானந்த சர்ஸ்வதியும் குற்றம் சாட்டியுள்ளார். உரிய முறைப்படி ராமர் சிலை நிறுவப்படாவிட்டால் அந்த பகுதியே அழியும் ஆபத்து உள்ளதாக அவர் எச்சரித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் மூலம் வருங்காலத்திலும் மத நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் தலையிடுவார்கள் என்றும் தங்களை யோகிகள் என்றும் தர்மாச்சாரியார்கள் என்றும் அரசியல்வாதிகள் விளம்பரம் செய்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிருங்கேரி சாரதா பீடத்தின் சுவாமி பாரதிகிருஷ்ணா தீர்த்தர், துவாரகா பீடாதிபதி சதானந்த சரஸ்வதி ஆகியோரும் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த 2500 ஆண்டுகளாக இந்து மதத்தின் முக்கிய மையங்களாகத் திகழும் சங்கராச்சாரியார்கள் புறக்கணிப்பால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சங்கராச்சாரியார்களின் நிலைபாடு குறித்து ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் விளக்கம் அளித்துள்ளார். அதில், அயோத்தி ராமர் கோயில் ராமருக்கே சொந்தமானது, சைவ, சாக்கிய, சன்னியாசிகளுக்கு சொந்தமானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

The post உரிய முறைப்படி ராமர் சிலை நிறுவப்படாவிட்டால் அந்த பகுதியே அழியும் ஆபத்து : சங்கராச்சாரியார்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Shankaracharya ,Lucknow ,Ayodhya Ram temple ,Shankaracharyas ,Ram temple ,
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்