×

தேசிய அளவில் உறைவாள் சண்டை போட்டி தஞ்சாவூர் மாணவிக்கு 2 பதக்கம்

 

வல்லம், ஜன.12: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்ற தஞ்சாவூர் மாணவி இரண்டு பதக்கங்கள் பெற்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த ஜன.4 -ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 24-வது தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டி நடந்தது. இதில் 23 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 8 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அணி சார்பில் உறைவாள் சண்டை போட்டி தமிழக அணிச் செயலாளரும், தலைமைப் பயிற்சியாளருமான ஜெ.செந்தில்குமார் தலைமையில் 36 பேர் கலந்து கொண்டனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 8 பேரும், ஈரோட்டிலிருந்து 16 பேர், சென்னையிலிருந்து 12 பேரும் கலந்து கொண்டனர்.

இதில் தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் தர்ஷினி (14) தனி சண்டை பிரிவில் வெள்ளி பதக்கமும், குழு கட்டா பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றார். இவர் தஞ்சாவூரில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் மார்ச் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான உறைவாள் சண்டை போட்டிக்கு தர்ஷினி தேர்வாகியுள்ளார். வெற்றி பெற்று பதக்கங்களுடன் சொந்த ஊருக்கு வந்த தர்ஷினிக்கு உறவினர்கள், சக விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

The post தேசிய அளவில் உறைவாள் சண்டை போட்டி தஞ்சாவூர் மாணவிக்கு 2 பதக்கம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Vallam ,Tamil Nadu ,Jaipur, Rajasthan ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அருகே மாட்டுச்சந்தை: 500 மாடுகள் விற்பனை