×

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.7.5 லட்சம் மோசடி பாஜ நிர்வாகி, மனைவிக்கு ஓராண்டு சிறை தண்டனை: நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு

 

உசிலம்பட்டி, ஜன. 12: உசிலம்பட்டியில், அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.7.50 லட்சம் மோசடி செய்த வழக்கில், பாஜ மாவட்ட நிர்வாகி, அவரது மனைவி மற்றும் மாமனாருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சிவமதன், மாவட்ட பாஜ சுற்றுச்சூழல் பிரிவு தலைவராக உள்ளார். இவரது மனைவி அபிராமி, மாமனார் செல்வம். இவர்கள் மூவரும் அதே ஊரைச்சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கு கடந்த 2020ம் ஆண்டு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளனர்.

இதற்காக ஆகாஷ் மற்றும் அவரது தாயார் ஜான்சிராணியிடம் இருந்து அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி ரூ.7.50 லட்சத்தை பெற்றுள்ளனர். பின்னர் அவர்கள் கூறியதுபோல் வேலை வாங்கித்தராததால், தங்கள் பணத்தை திரும்ப தரும்படி ஆகாஷ் கேட்டுள்ளார். அப்போது அவரையும், அவரது தாயாரையும் வீட்டிற்கு அழைத்துச்சென்ற சிவமதன், தன் மனைவி, மாமனாருடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிவு சிவமதன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை உசிலம்பட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் நேற்று மாஜிஸ்திரேட் மகாராஜன் தீர்ப்பு வழங்கினார். அதில் சிவமதன், அவரது மனைவி அபிராமி, மாமனார் செல்வம் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் மூவரும் தலா ரூ.2.5 லட்சத்தை ஆகாஷ் மற்றும் அவரது தாயாருக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துவள்ளி ஆஜரானார்.

The post அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.7.5 லட்சம் மோசடி பாஜ நிர்வாகி, மனைவிக்கு ஓராண்டு சிறை தண்டனை: நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Usilampatty ,BAJA DISTRICT ,USILAMBATI ,Madurai District ,Baja ,Dinakaran ,
× RELATED பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால்...