×
Saravana Stores

ராமர் கோயில் திறப்பு விழாவில் அத்வானி பங்கேற்பார்: விஷ்வ இந்து பரிசத் தகவல்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொள்வார் என விஷ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், ஜனவரி 22ம் தேதி மதியம் 12.20 மணிக்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் நேரடி ஔிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க முக்கிய கட்சிகளின் தலைவர்கள், மக்களவை, மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்கள், மற்றும் 1984 – 1992 காலகட்டத்தில் ராமர் கோயில் இயக்கத்தில் பங்கேற்றவர்கள் என்ற 3 அளவுகோல்களின் அடிப்படையில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ராமர் கோயில் இயக்கத்தில் பங்கேற்ற பாஜ முக்கிய தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் வயது, உத்தரபிரதேசத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில் விஷ்வ இந்து பரிசத் செயல்தலைவர் அலோக் குமார் நேற்று செய்தியாளர்களிடம் “ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் அத்வானி கலந்து கொள்வார். தேவைப்பட்டால் அவருக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். முரளி மனோகர் ஜோஷி விழாவில் பங்கேற்க முயற்சிப்பதாக சொல்லியுள்ளார்” என்று தெரிவித்தார்.

* 22ம் தேதி இலவச படகு சவாரி
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 22ம் தேதி கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இலவச படகு சவாரி வழங்கப்பட உள்ளது.

The post ராமர் கோயில் திறப்பு விழாவில் அத்வானி பங்கேற்பார்: விஷ்வ இந்து பரிசத் தகவல் appeared first on Dinakaran.

Tags : Advani ,Ram Temple ,Vishwa Hindu Parish ,New Delhi ,BJP ,LK Advani ,Ayodhya Ram temple ,Vishva Hindu Parishad ,Ayodhya, Uttar Pradesh ,
× RELATED உலக சாதனை படைக்க ஏற்பாடு அயோத்தி ராமர்...