×

போகி பண்டிகையின் போது விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் குப்பை, கழிவு எரிக்க வேண்டாம்: இந்திய விமான நிலைய ஆணையம் வலியுறுத்தல்

மீனம்பாக்கம், ஜன.12: பொங்கல் பண்டிகையின் முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில், வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவைகளை தெருக்களில் போட்டு எரிப்பார்கள். சென்னை புறநகரான பல்லாவரம், மீனம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பசார், தரைப்பாக்கம், மணப்பாக்கம் கொளப்பாக்கம் ஆகிய விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் குப்பை எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மண்டலம், விமான நிலைய ஓடு பாதைகளை சூழ்ந்து கொள்கிறது. மேலும் அதிகாலை நேரத்தில் ஏற்படும் பனிமூட்டமும், புகை மூட்டமும் சேர்ந்து விமான நிலைய ஓடுபாதையே தெரியாத நிலையில், விமானங்கள் வந்து தரையிறங்குவது, புறப்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த 2019ம் ஆண்டு, 23 சர்வதேச விமானங்கள் உட்பட 42 விமானங்கள், போகிப் பண்டிகை புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க, புறப்பட முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகின. பெரும்பாலான விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத், திருச்சி, கோவைக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

ஒரு சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன. இதைப்போல் 2020 மற்றும் 2021ம் ஆண்டு போகிப் பண்டிகைகளிலும், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு, போகி பண்டிகைக்கு முன்னதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள், தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகம் ஆகியோருடன் இணைந்து, சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள், கிராமங்களை சேர்ந்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, டயர், பிளாஸ்டிக் போன்றவைகளை எரிப்பதால், விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

எனவே இதைத் தடுக்க அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துனர். இதனால் கடந்த 2022ம் ஆண்டு போகிப் பண்டிகையின் போது, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகள் புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. 2023ம் ஆண்டு போகிப் பண்டிகையின் போது, அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில், சென்னை விமான நிலையத்தில் புகைமூட்டம் எதுவுமே இல்லாமல் அனைத்து விமானங்களும் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டன.

அதைப்போல் இந்த ஆண்டும் போகிப் பண்டிகையின் போது, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியில் புகைமூட்டம் ஏற்படாமல் தடுக்க, இந்திய விமான நிலைய ஆணையம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதோடு விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, டயர், பிளாஸ்டிக் போன்றவைகளை பொது இடங்களில் எரிப்பதை தவிர்த்து விடுங்கள், விமான சேவைகள் பாதிக்காமல் இருக்க முழு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று வேண்டுகோள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் வழங்கி வருகின்றனர். அதோடு குடியிருப்பு பகுதியில் உள்ள இளைஞர்களும், தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை போகி பண்டிகையின்போது, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் இயங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

The post போகி பண்டிகையின் போது விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் குப்பை, கழிவு எரிக்க வேண்டாம்: இந்திய விமான நிலைய ஆணையம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bhogi festival ,Airports Authority of India ,Meenambakkam ,Phogi ,eve ,Pongal festival ,Chennai ,Pallavaram ,Pammel ,Anakaputhur ,Pozhichalur ,Bogi festival ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்