×

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் விடுதியில் தங்கி பணிபுரிய ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, ஜன.12: செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் விடுதியில் தங்கி பணிபுரிய விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பணித்திறனில் பெண்களின் பங்களிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில், குறைந்த வாடகையில் பணிபுரியும் இடத்திற்கு அருகாமையில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் இருப்பது மிகவும் அவசியமான தேவையாக உள்ளது. இத்தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்குக்காக பல்வேறு மாவட்டங்களில் மகளிர் விடுதிகள் அமைத்து செயல்படுத்தி வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்” என்ற அமைப்பை அமைத்துள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் எண்.8, நிர்மலா கார்டன் ஹோம் ரோடு, ஜட்ஜ் காலனி, தாம்பரம் சானடோரியம், செங்கல்பட்டு மாவட்டம் 600 047 என்ற முகவரியில் புதியதாக பணிபுரியும் மகளிர் விடுதி கட்டி முடிக்கப்பட்டு 4.1.2024 அன்று முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இவ்விடுதி 461 படுக்கை வசதியுடன் இருவர், நால்வர் தங்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இவ்விடுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பு வசதி, இலவச வைபை, பயோமெட்ரிக், பொழுதுபோக்கு அறை ஆகிய நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், www.tnwwhcl.in என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கட்டணம் செலுத்திடும் முறை அறிமுகம் செய்யப்பட்டு பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியினை சொந்த இடங்களை விட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்கள் கூட மகளிர் இவ்விடுதிகளில் தங்கிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் விடுதியில் தங்கி பணிபுரிய ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : in Women's Hostel ,Chengalpattu District ,Chengalpattu ,Collector ,Rahul Nath ,
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...