×
Saravana Stores

சபரிமலையில் எருமேலியில் இன்று பேட்டை துள்ளல்: நேற்றும் தரிசனத்திற்கு நீண்ட வரிசை

திருவனந்தபுரம்: சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் இன்று (12ம் தேதி) நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் சபரிமலையில் தொடங்கிவிட்டன. மகரஜோதியை தரிசிப்பதற்காக இப்போதே பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்கி விட்டனர். இதனால் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 14ம் தேதி 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 15ம் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக எருமேலியில் பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல் நடைபெறும். மகிஷியை ஐயப்பன் வதம் செய்ததை கொண்டாடும் வகையில் இந்த பேட்டை துள்ளல் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் பாரம்பரிய உடையணிந்து உடலில் வண்ண சாயங்களை பூசி மேளதாளத்துடன் நடனமாடுவார்கள்.

இன்று பிரசித்தி பெற்ற இந்த எருமேலி பேட்டை துள்ளல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு எருமேலி பகுதி அமைந்துள்ள கோட்டயம் மாவட்டம் காஞ்சிரப்பள்ளி தாலுகாவிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாபரண ஊர்வலம் நாளை (13ம் தேதி) பந்தளத்திலிருந்து புறப்படுகிறது. சபரிமலையில் நேற்றும் பக்தர்கள் கட்டுக் கடங்காமல் குவிந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோதே தரிசனத்திற்காக பக்தர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது.

* 2500 போலீசார் குவிப்பு
மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானத்தில் மட்டும் எஸ்பி சுஜித் தாஸ் தலைமையில் 2500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் மூலம் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நேற்று போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பக்தர்கள் 10 இடங்களில் குவிவார்கள். இந்த இடங்களில் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நேற்று நேரடியாக சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்.

The post சபரிமலையில் எருமேலியில் இன்று பேட்டை துள்ளல்: நேற்றும் தரிசனத்திற்கு நீண்ட வரிசை appeared first on Dinakaran.

Tags : Sabarimala Erumeli ,darshan ,Thiruvananthapuram ,Erumeli ,Bata Tullal ,Makaravilakku Puja ,Sabarimala ,Makarajyothi Darshan ,Sabarimala Ayyappan Temple ,
× RELATED ‘திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்துக்கு ரூ.2,000 கட்டணமா?’