×

பாபா ‘2498’

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இடம்: சிதம்பரம், நாள்: 25-05-1336

‘இது ஆன்மிக சாதனைக்கு மிக மிக உகந்த நாளாகும். நம் வாழ்வில் இந்த நாள் சிறப்பான திருப்புமுனையாக அமையப் போகிறது’ என்று கூறிய ஸ்ரீபழநி ஸ்வாமிகளும், சங்கரபட்டரும், மாதவனும் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரை நோக்கி தியானம் செய்யத் தொடங்கினர். பத்து நாழிகைகள் (4 மணி நேரம்) தியானம் செய்து விட்டு மூவரும் ஒரே நேரத்தில் சுய நினைவிற்குத் திரும்பினர். ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்த தியான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அப்பொழுது ஸ்ரீபழனி ஸ்வாமிகள், சங்கரரிடம், ‘நீ தியானத்தில் கண்ட முஸ்லீம் பக்கிரி போன்ற உருவம் உள்ளவர் மூலம் தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீபாதரின் கிருபை எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பரவும். நீ வேப்ப மரத்தடியில் நான்கு நந்தா விளக்குகளையும் தியான அறையையும் பார்த்தாய். ஸ்ரீபாதர் உனக்கு இந்த அனுபவத்தை ஒரு மிகப் பெரிய செயலை முன்னிட்டு அளித்திருக்கிறார்’ என்றார்.

கோயில், தில்லை, பொன்னம்பலம், சிற்றம்பலம் என்று இன்னும் பலவாறு அழைக்கப்படும் தமிழ்நாட்டின் சிதம்பர க்ஷேத்ரத்தில் தான் ஸ்ரீசாயி நாதரின் அவதார ரகசியத்தை சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னால் இம்மூவருக்கும், ஸ்ரீபாதர் சூட்சும ரூபத்தில் வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிவபூஜை செய்து வரும் பாபன்னார்யாவின் மகளான ஸ்ரீசுமதி மஹாராணிக்கும், ஸ்ரீஅப்பலராஜ சர்மாவிற்கும் விநாயகர் சதுர்த்தியன்று, விடியற்காலை சிம்ம லக்கினம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம் கூடிய சுபயோக நாளில் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் அவதாரம் செய்தார்.

தாயின் வயிற்றிலிருந்து ஓர் ஒளி வெள்ளம் வெளிப்பட இன்னிசை வாத்தியங்களின் மங்கல ஒலிகள் ஒலிக்க அவர் ப்ரவேசித்து ப்ரசவித்த அறை முழுமையும் மங்கல ஒலியும் ஒளியுமாய் விளங்கியது. ஸ்ரீபாதரின் வலது உள்ளங்காலில் மணிமாலை, திரிசூலம், சக்கரம் முதலிய தெய்வீகச் சின்னங்களையும் இடது உள்ளங்காலில் கமண்டலம், உடுக்கை, சங்கு முதலிய தெய்வீகச் சின்னங்களையும் கண்ட பாபன்னார்யா ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் தத்தாத்ரேயரின் அவதாரமே என்பதைப் புரிந்து கொண்டார்.

ஸ்ரீபாதர் பிறந்த பீடிகாபுரத்தில் பாபன்னார்யா தலைமையில் ஓர் யாகம் தொடங்கியது. யாகம் தொடங்கிய பின் யாகத்திற்கு வாங்கிய நெய் போதுமானதாக இல்லை. அப்பொழுது ஆறு வயதான ஸ்ரீபாதர் ஒரு வயதானவரைக் கூப்பிட்டு, ‘அம்மா கங்கையே! இந்த யாகம் நடத்த தகுந்த அளவு நெய்யைத் தரவும். எங்கள் தாத்தா அந்தக் கடனைத் திருப்பித் தருவார். இது ஸ்ரீபாதரின் ஆணை’ என்று ஒரு பனை ஓலையில் எழுதச் செய்து, அதை பாதகயா தீர்த்தத்தில் சேர்க்கும் படிச் சொன்னார்.

நான்கு பேர் அந்த ஓலையை எடுத்துக் கொண்டு பாதகயா குளத்தில் சேர்த்து விட்டு அந்த குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்தனர். அந்த தண்ணீர் முழுவதும் நெய்யாக மாறி யாகம் சிறப்பாக நடந்தேறியது. மீதம் இருந்த நெய்யை பாதகயா தீர்த்தத்தில் ஊற்ற, நெய் மீண்டும் தண்ணீராக மாறியது. இது போன்ற எண்ணற்ற அருட்செயல்களையும் லீலைகளையும் பக்தர்களுக்காக ஸ்ரீபாதர் நடத்திக் காட்டினார்.

தனது பதினாறாவது வயதில் துறவறம் மேற்கொண்டு குருவபுரத்தில் தவமியற்றினார். பாப்பன்னார்யா ஸ்ரீபாதரின் அவதார சக்தியை உணர்ந்து, அவர் மேல் ‘‘ஸ்ரீசித்தமங்கள ஸ்தோத்ரம்’’ பாடினார். ஆனந்த மயமான மகிழ்ச்சி வெள்ளத்தைக் கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த அமுத மொழிகளாக இன்றளவும் அந்த ஸ்தோத்ரம் திகழ்கிறது. இந்த ஸ்தோத்ரம் பாராயணம் செய்யப்படும் மற்றும் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் சித்த புருஷர்கள் சூட்சும ரூபத்தில் அருள்புரிவார்கள் என்பது ஸ்ரீபாதரால் ஆட்கொள்ளப்பட்ட ஸ்ரீநாமானந்தர் என்ற மஹானின் வாக்கு. கோடி தாய்மார்களின் அன்பை விட உயர்ந்த ஸ்ரீபாதரின் மேலான கருணையும் அருளும் இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவர்களுக்குக் கிடைக்கும்.

ஸ்ரீமதனந்த ஸ்ரீவிபூஷித அப்பல லக்ஷ்மீ நரஸிம்ஹ ராஜா |
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ || (1)
ஸ்ரீவித்யாதரி ராதா சுரேகா ஸ்ரீராகீதர ஸ்ரீபாதா|
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ || (2)
மாதா சுமதி வாத்ஸல்யாம்ருத பரிபோஷித ஜய ஸ்ரீபாதா |

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ || (3)
ஸத்ய ருஷீஸ்வர துஹிதாநந்தன பாப்பனார்யநுத ஸ்ரீசரணா |
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ || (4)
ஸவித்ருகாடக சயன புண்யபல பரத்வாஜ ருஷிகோத்ர ஸம்பவா |

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ || (5)
தோ சௌபாத்தி தேவ் லக்ஷ்மி கண ஸங்க்யா போதித ஸ்ரீசரணா |
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ || (6)
புண்ய ரூபிணீ ராஜமாம்பசுத கர்ப புண்யபல ஸஞ்ஜாதா |

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ || (7)
சுமதிநந்தன நரஹரிநந்தன தத்த தேவ ப்ரபு ஸ்ரீபாதா |
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ || (8)
பீடிகாபுர நித்யவிஹாரா மதுமதி தத்தா மங்கள ரூபா |

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ || (9)
ஒன்பது ஸ்லோகங்களால் ஆன இந்த ஸ்தோத்ரத்தின் ஆறாவது ஸ்லோகம் தான்
‘‘தோ சௌபாத்தி தேவ் லக்ஷ்மி கண சங்க்யா போதித ஸ்ரீசரணா |
ஜய விஜயீபவ திக் விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ ||’’

‘தோ சௌபாத்தி தேவ் லட்சுமி’ என்ற எண்ணிற்கு விளக்கம் சொன்ன  ஸ்ரீபாத சரணருக்கு சர்வ மங்களமும், திக்கெட்டும் வெற்றியும், வானளாவிய புகழும் கிடைக்குமாக!’’ என்பது பொருள். ஸ்ரீபாதர் தனக்கு விருப்பமுள்ளவர்களின் வீட்டில் பிட்சை எடுக்கும் போது இரண்டு சப்பாத்திகளை வாங்கிக் கொள்வார். அந்த இரண்டு சப்பாத்தி கொடுங்கள் என்பதைத் தான் ‘தோ சௌபாத்தி தேவ் லட்சுமி’ என்று கேட்பார். இதில் ‘தோ’ என்பது இரண்டையும் (2), ‘சௌ’ என்பது நான்கையும்(4), ‘பதிதேவ்’ என்பது பரப்ரஹ்ம ஸ்வரூபமான பரமேஸ்வரருக்கான ஒன்பதையும் (9), ‘லட்சுமி’ என்பது மாயா சக்தியான எட்டையும் (8) குறிக்கும். ஆகையால், ஸ்ரீபாதரின் வழிபாட்டில் இன்றும் ‘2498’ என்பது ஸ்ரீபாதரின் தெய்வீகக் குறியீடாகவே உள்ளது. இரண்டு (2), நான்கு (4) என்பது 24 ஆக அன்னை காயத்ரியையும், காய்தரி மந்திரத்தையும் குறிக்கும். ஏனெனில், காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களை உடையது.

ஓம் என்று கூறும் போது தலைக்கு மேல் ஆறு அங்குலமும், பூ: எனும் போது வலது கண் மேல் நான்கு அங்குலமும், புவ: எனும் போது நெற்றிக்கண் (புருவமத்தியில்) மேல் மூன்று அங்குலமும், ஸ்வ: எனும் போது இடது கண் மேல் நான்கு அங்குலமும் விழிப்படைகின்றன. காயத்ரியில் உள்ள 24 அட்சரங்களும் நம் உடம்பில் உள்ள 24 யோக க்ரந்தி (முடிச்சு)களில் உள்ள
சக்திகளை விழிப்படையச் செய்கின்றன.

‘‘உடலில் உள்ள ஆதாரங்களில் அமர்ந்து தனது அருளால் ப்ரஹ்ம க்ரந்தி, விஷ்ணு க்ரந்தி, ருத்ர க்ரந்தி ஆகிய முடிச்சுகளை (க்ரந்தி) அவிழ்ப்பவள் அம்பிகையே’’ என்று லலிதா ஸஹஸ்ரநாமம் குறிப்பிடுகிறது. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் 24 நாமங்கள் காயத்ரியின் 24 அட்சரங்களை குறிக்கின்றன. காயத்ரி மந்திரம் சொல்லிய பின்பு விஷ்ணுவின் 24 நாமங்களைச் சொல்வது வேத விற்பன்னர்களின் நடைமுறையில் உள்ளது. 24 என்பது ஆதி குருவான தத்தாத்ரேயரின் 24 குருமார்களையும், ஆன்மதத்துவம் இருபத்தி நான்கையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

பரமாத்மா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தாலும் அதனால் எந்த மாற்றங்களுக்கும் உட்படாதவர். ஒன்பது என்பது ஒரு விநோத எண்ணாகும். ஒன்பதுடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும் அது ஒன்பதாகத் தான் வரும். பூரணத்திலிருந்து பூரணம் வந்த பின்பும் பூரணமாக இருப்பது போல் ஒன்பது மட்டுமே மாற்றம் இல்லாத பரப்ரஹ்மத்தைக் குறிக்கும்.

‘‘பூர்ணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ண மேவாவசிஷ்யதே ||’’
என்பது சுக்ல யஜூர் வேதத்தின் சாந்தி மந்திரம்.

எட்டாம் எண் என்பது மாயா தத்துவம். எட்டு என்ற எண்ணுடன் ஒன்றைப் பெருக்கினால் எட்டு. இரண்டைப் பெருக்கினால் பதினாறு (16). ஒன்று+ஆறு=ஏழு வரும். இதைப் போன்றே எந்த எண்ணை எட்டால் பெருக்கினாலும் அதிலுள்ள எண்களின் கூட்டுத் தொகை எட்டாகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ குறைந்து கொண்டே வந்து மீண்டும் கூடும். பின்பு குறையும். அனைத்து ஜீவராசிகளின் சத்தியையும் திரும்ப பெற்றுக் கொள்ளும் சக்தி ஆதிசக்தியிடமே உள்ளது. உலக மாற்றங்களை நிச்சயிப்பது ஆதிசக்தியே. அந்த ஆதிசக்தியின் குறியீடே எட்டாகும். ‘ப்ரஹ்ம சத்யம் ஜகத் மித்யா’ என்பது ப்ரஸித்தமான வாக்கியம்.

‘தோ சௌபாத்தி தேவ் லட்சமி’ என பிட்ச வேண்டிய ஸ்ரீபாதர், அன்னை காயத்ரியை உபாசனை செய்து வணங்கி, உலகின் மாயையைக் கடந்து பரப்பிரம்மத்தை அடைய வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தினார். எனவே, 2498 என்ற எண் ஸ்ரீபாதரைக் குறிப்பிடுவதாகும். நாம் பயன் படுத்தும் தொலைபேசி அல்லது வாகனத்தின் எண்கள் 2498 என்று நிறைவு பெறுமானால் நாம் ஸ்ரீபாதரின் ஆசியைப் பெற்றிருக்கிறோம் என்று பொருள். ஸ்ரீபாதர் எப்பொழுதும் நம்முடன் இருந்து நம்மைக் காப்பாராக. ஸ்ரீபாதராஜம் சரணம் ப்ரபத்யே.

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post பாபா ‘2498’ appeared first on Dinakaran.

Tags : 2498 ,Anmikam ,Chidambaram ,Sripalani Swami ,Sankarabhatta ,Madhavan ,Sripada Srivallabara ,Baba ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்