×

டெல்லியில் கடும் குளிர்: மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

புதுடெல்லி: டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாள்களாக அதிகாலை வேளையில் மிகுந்த அடர்த்தியான மூடுபனி நிலவி வருகிறது. ஏற்கனவே, வானிலை கண்காணிப்பு மையம் கணித்திருந்தபடி, பஞ்சாப், அரியானா மற்றும் டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நேற்று கடுமையான குளிர் அலை வீசியது. பகல் நேரத்திலும் மிதமான மூடுபனி இருந்தது. இதைத்தொடர்ந்து, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 7.1 டிகிரி செல்சியசாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 4 டிகிரி குறைந்து 15.2 டிகிரி செல்சியசாக பதிவாகியது. இதேபோன்று, மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான ஜாபர்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.3 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 5 டிகிரி, லோரி ரோடில் 6.4 டிகிரி, நரேலாவில் 8.5 டிகிரி, பாலத்தில் 7.4 டிகிரி, ரிட்ஜில் 6.4 டிகிரி, பீதம்புராவில் 9.3 டிகிரி, பூசாவில் 8.8 டிகிரி, ராஜ்காட்டில் 6.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. காற்றின் தரத்தில் நேற்று முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

தலைநகரில் நேற்று முன்தினம் 366 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்த ஒட்டு மொத்த காற்று தர குறியீடு, நேற்று 269 புள்ளிகளாக பதிவாகி ‘மோசம்’ பிரிவுக்கு வந்ததாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவர தகவல் தெரிவிக்கிறது. டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

24 ரயில்கள் தாமதம்: கடும் பனியின் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ரயில் சேவையும் பாதிப்படைந்துள்ளது. சாலையோரம் வசிப்பவர்களை இரவு கூடாரங்களில் தங்க வைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. வருகிற 14ம் தேதி வரை இந்நிலை நீடிக்கும். ஜம்மு பிரிவு, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், வட ராஜஸ்தான், வட மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளிலும் அதிக பனிக்கான சூழல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், அடர்பனியால் 24 ரயில்கள் மிக காலதாமதத்துடன் இன்று இயக்கப்பட்டன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெல்லிக்கு வர கூடிய ரயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புகளால் பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்க காத்திருக்கும் உறவினர்களும் சிரமமடைந்து வருகின்றனர். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஐதராபாத், பெங்களூரு, புவனேஸ்வர், அஜ்மீர், பூரி, ரேவா, செகந்திராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டெல்லி செல்ல கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லியில் கடும் குளிர்: மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Capital Delhi ,Meteorological Center ,Punjab ,Ariyana ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு