×

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு லட்சத்து எட்டு வடைகளின் மூலம் மாலை அலங்காரம்!

நாமக்கல்:அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில்களுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று (11.01.2024) ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டது. அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கோட்டை சாலையில் இன்று ஒரு நாள் மட்டும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

The post நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு லட்சத்து எட்டு வடைகளின் மூலம் மாலை அலங்காரம்! appeared first on Dinakaran.

Tags : Namakkal Anjaneyar Temple ,Namakkal ,Anuman Jayanti ,Namakkal Anjaneya ,Hanuman Jayanti ,Namakkal Anjaneyar ,Temple ,Sami ,
× RELATED ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்