×

எச்சரிக்கையை மீறி மீண்டும் சாலை, தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிபட்டால் உரிமையாளர்களுக்கு சொந்தமில்லை: ஆவணங்களில் பதிவேற்ற மாநகராட்சி முடிவு

சென்னை, ஜன.11: எச்சரிக்கையை மீறி மீண்டும் தெருக்களில் மாடுகளை திரிய விட்டால், பிடிபடும் மாடுகள் உரிமையாளர்களுக்கு சொந்தமில்லை என ஆவணங்களில் பதிவேற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடியாக முடிவெடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், நங்கநல்லூரில் நேற்று முன்தினம் மாடுகளால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நங்கநல்லூர் பகுதியில் நேற்று நேரில் சென்று மாநகராட்சி பணியாளர்களால் மாடுகள் பிடிக்கும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகள் நடமாடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த பகுதியில் நேற்று முன்தினம் காளை மாடுகள் முட்டியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபோன்ற நிகழ்வு என்பது முதல் தடவை அல்ல. திருவல்லிக்கேணி, அரும்பாக்கம் போன்ற இடங்களிலும் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி மாடுகளின் உரிமையாளர்களுக்கான அபராதத் தொகையை அதிகப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் இப்பகுதியில் மட்டும் 10 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் மற்றும் தெருக்களில் நேற்று முன்தினம் மட்டும் 14 மாடுகள் பிடிக்கப்பட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 4,237 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, ரூ.92.63 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 2024ல் இதுவரை 8 நாட்களில் 42 கால்நடைகள் பிடிக்கப்பட்டு ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மாமன்றத்தின் தீர்மானத்தின் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான பராமரிப்பு மற்றும் அபராதத் தொகையை மாடு ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரம் எனவும், பராமரிப்பு தொகையாக 3ம் நாள் முதல் நாளொன்றிற்கு ரூ.1,000 கூடுதலாக உயர்த்தியும், மீண்டும் அதே மாடுகள் பிடிக்கப்பட்டால் அபராதத் தொகையாக ரூ.10,000 எனவும், பராமரிப்பு தொகையாக மூன்றாம் நாள் முதல் நாளொன்றிற்கு ரூ.1,000 எனவும் கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அபராதம் விதித்து வந்தாலும் கடந்த ஆண்டு மட்டும் ரூ.1 ேகாடி அபராத தொகை வசூலிக்கப்பட்ட நிலையிலும், எழுதி எல்லாம் கொடுத்து விட்டு திருப்பி திருப்பி அதே தொழிலில்தான் ஈடுபடுகின்றனர். தேவையான இட வசதி இல்லாமல் தெருவில் விடுகின்றனர். சென்னை மாநகராட்சி வண்டி வந்தால் கட்டி விடுகின்றனர். வண்டி சென்றதும் திறந்து விடுகின்றனர். இதை மாட்டு உரிமையாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு உயிர் போகும் அளவுக்கு அவர்கள் தொழில் செய்வது நியாயமா? நகர்ப்புறங்களில் இடவசதி இல்லாமல் மாடுகள் வளர்க்க இயலாது. போதிய இடவசதி இருந்தால் மட்டுமே மாடுகள் வளர்க்க லைசென்ஸ் வழங்கப்படும். மாட்டு உரிமையாளர்களின் நடவடிக்கைகள் வருத்தம் அளிப்பதாக உள்ளது. இனியும் பிடிபட்டு மீண்டும் தெருக்களில் மாடுகளை அவர்கள் விட்டால், சம்பந்தப்பட்ட மாடு உரிமையாளருக்கு சொந்தமில்லை என்று ஆவணங்களில் பதிவேற்றம் செய்வது தான் ஒரே வழி. மாட்டு உரிமையாளர்கள் மீதும் சட்டம் பாயும். இவ்வாறு அவர் கூறினார்.

அராஜகம்
மாநகராட்சி வண்டி வரும்போது மாடுகளை உரிமையாளர்கள் மறைத்து வைக்கின்றனர். திருவல்லிக்கேணி பகுதியில் எங்களிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த அளவுக்கு மாட்டு உரிமையாளர்கள் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். மாடு ஒரு சாதுவான பிராணி. அதற்கு தேவையான உணவு உள்ளிட்டவைகளை வழங்காததால் தான் அவை வெளியில் திரிகிறது. ஓரளவு கட்டுப்படுத்தினோம், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுப்போம். கடந்த சம்பவத்தில் மாட்டு உரிமையாளர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னரே சிறையில் இருந்து வெளி வந்தனர். இந்த சம்பவத்திலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

மாடு வளர்க்க இடம்கேட்டு வாக்குவாதம்
நங்கநல்லூரில் சந்திரசேகர் (63) என்பவர் நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்றார். அப்போது, சண்டை போட்டபடி ஓடி வந்த 2 மாடுகளுக்கு இடையே சிக்கி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சந்திரசேகர் பலியான இடத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதியில் சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகளை வாகனங்கள் மூலம் பிடித்துச் செல்லும் பணியையும் அவர் பார்வையிட்டார். அப்போது, மாடுகளை பிடித்துச் செல்லாமல், அவைகளை வளர்க்க இடம் தாருங்கள் எனக் கூறி மாடு வளர்ப்பவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post எச்சரிக்கையை மீறி மீண்டும் சாலை, தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிபட்டால் உரிமையாளர்களுக்கு சொந்தமில்லை: ஆவணங்களில் பதிவேற்ற மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Municipality ,Alandur Zone ,Nanganallur ,Mundinam ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...