×

காதலன் மிரட்டியதால் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி பலி

மாதவரம், ஜன. 11: ஒன்றாக இருந்த புகைப்படத்தை குடும்பத்தாரிடம் காட்டிவிடுவேன் எனக்கூறி காதலன் மிரட்டியதால் மாடியில் இருந்து குதித்ததில், படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரம்பூர் பாரதி முதல் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி (18). இவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பாரிமுனையில் உள்ள கல்லூரியில் கிருஷ்ணகுமாரி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கொளத்தூர் ஜிகேஎம் காலனியைச் சேர்ந்த விக்கி என்பவரை கிருஷ்ணகுமாரி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் விக்கியுடன் பழகுவதை அவர் நிறுத்திவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த விக்கி, என்னிடம் பேசவில்லை என்றால் நாம் ஒன்றாக இருந்த புகைப்படங்களை உனது குடும்பத்தாரிடம் காட்டி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த கிருஷ்ணகுமாரி கடந்த 2ம் தேதி இரவு 10 மணியளவில் தனது வீட்டின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில், தலை, முகம், உடல் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகுமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதலன் மிரட்டியதால் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி பலி appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Krishnakumari ,Perambur Bharti First Street ,Bali ,
× RELATED மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த...