×

அயோத்தி திறப்பு விழாவில் 4 சங்கராச்சாரியார்களும் பங்கேற்க மாட்டோம்: உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் அறிவிப்பு

லக்னோ: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் 4 சங்கராச்சாரியார்களும் கலந்து கொள்ள மாட்டோம் என்று உத்தரகாண்ட் ஜோதிர் மட சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்தார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ம் தேதி நடக்கிறது. இந்த கும்பாபிஷேகவிழாவில் கலந்து கொள்ளப்போவது இல்லை என்று பூரிகோவர்த்தன் மடத்தின் மடாதிபதி நிச்சலானந்த சரஸ்வதி தெரிவித்தார். அவர் கூறும்போது,’எனது பதவியின் கண்ணியத்தை உணர்ந்ததால் அயோத்தி விழாவை தவிர்க்கிறேன். ராமர் சிலையை மோடி திறந்து வைக்கும் போது, ​​நான் அங்கு நின்று கைதட்ட வேண்டுமா?’ என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்தநிலையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் 4 சங்கராச்சாரியார்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்ஸே்வரானந்த் சரஸ்வதி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: நானும், கோவர்தன் மடம்,சிருங்கேரி சாரதா பீடம், துவரகா சாரதா பீடத்தை சேர்ந்த நான்கு சங்கராச்சாரியார்களும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம். ராமர் கோயில் திறப்பு விழா சாஸ்திர விதிகளின் படி நடக்க வேண்டும் என்பதே சங்கராச்சாரியார்களின் விருப்பம். ஆனால் அயோத்தியில் சாஸ்திர விதிக்கு எதிராக நடக்கிறார்கள். கோயில் கட்டுமானம் இன்னும் முடியவில்லை. ஆனால் ராமர் சிலையை அங்கு பிரதிஷ்டை செய்யப்போகிறார்கள். அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவசர, அவசரமாக ராமர் கோயிலை 22ம் தேதி திறக்க வேண்டிய அவசியம் என்ன? நம்மிடம் அவகாசம் இருக்கிறது. ராமர் சிலையை நன்றாக செய்து பிரதிஷ்டை செய்யலாம். பணிகள் முடியாத கோயிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார்கள். இதனை எப்படி நாங்கள் ஏற்போம்?.

இதுசரியில்லை என்று நாங்கள் சொல்லியே ஆக வேண்டும். இதை சொன்னால் எங்களை எதிரி என்கிறார்கள். மோடிக்கு எதிரானது என்கிறார்கள். இதில் மோடி எதிர்ப்பு எங்கிருந்து வந்தது?. நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் நாங்கள் தர்ம சாஸ்திரத்துக்கு எதிரானவர்களாக இருக்கக்கூடாது. தர்ம சாஸ்திரத்தின்படியே நாங்களும் நடப்போம். மக்களையும் நடக்கச்சொல்வோம். ஏனென்றால் தர்ம சாஸ்திரத்தில் புண்ணியம், பாவம் இருக்கிறது.
ராமரை யார் நமக்கு சொன்னது? தர்ம சாஸ்திரங்கள் தான் சொல்லிக்கொடுத்தன. எனவே முழுமையடையாத கோவிலை கும்பாபிஷேகம் செய்வது அறியாமையின் செயல். இந்த நிகழ்வு அரசியலாக்கப்படுகிறது.

ஏனென்றால், இந்த விழா சாஸ்திரங்களுக்கு எதிராக, புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. எனவே அயோத்தி விழாவில் பங்கேற்க விரும்பாத நான்கு சங்கராச்சாரியார்களின் முடிவை மோடிக்கு எதிரானது என்று கருதக்கூடாது. நாங்கள் சாஸ்திரங்களுக்கு எதிரானவர்களாக இருக்க விரும்பாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அயோத்தி செல்லாததற்கு என்ன காரணம்? வெறுப்பு காரணமாக அல்ல. சாஸ்திர விதியை பின்பற்றுவதும், அவை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதும் சங்கராச்சாரியார்களின் கடமையாகும். ஆனால் அயோத்தியில் சாஸ்திர விதி புறக்கணிக்கப்படுகிறது. கோவில் முழுமையடையாத நிலையில் கும்பாபிஷேகம் நடப்பது மிகப்பெரிய பிரச்னை என்றார்.

* ராமர் கோயில் சன்னியாசிகளுக்கு சொந்தமானது இல்லை
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) சர்வதேச துணைத் தலைவரும், அயோத்தி கோயிலைக் கட்டுவதற்கும் நிர்வகிப்பதற்கும் அமைக்கப்பட்ட அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளருமான சம்பத் ராய் கூறுகையில்,’ ராமர் கோயில் வைஷ்ணவப் பிரிவான ராமானந்த சம்பிரதாயத்துக்குச் சொந்தமானது. சன்னியாசிகளுக்கோ அல்லது சைவ அல்லது சக்தி பிரிவினருக்கோ அல்ல’ என்றார்.

The post அயோத்தி திறப்பு விழாவில் 4 சங்கராச்சாரியார்களும் பங்கேற்க மாட்டோம்: உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Shankaracharyas ,Ayodhya ,Uttarakhand ,Lucknow ,Jyotir Mada Shankaracharya ,Avimukteswaranand ,Saraswati ,Ayodhya Ram Temple ,Kumbabhishekam ,Kumbabhishek ,Shankaracharya ,
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்