×

பேராசிரியரின் கையை வெட்டிய 13 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் ஜோசப். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மலையாள பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2010ம் ஆண்டு கல்லூரித் தேர்வுக்கான மலையாள வினாத்தாளை இவர் தயாரித்தார். அந்த வினாத்தாளில் இஸ்லாம் மதத்தை குறித்து அவதூறாக குறிப்பிட்டதாக கூறி பேராசிரியர் ஜோசப் மீது ஒரு கும்பல் கோடாரி மற்றும் இரும்பு ஆயுதங்களால் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் அவரது வலது உள்ளங்கை துண்டிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல வருட சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறினார். இந்த சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை முதலில் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வந்தது. இதன்பின் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட போதிலும் முதல் நபராக கருதப்பட்ட எர்ணாகுளத்தை சேர்ந்த சவாத் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் சவாத் கண்ணூர் அருகே உள்ள மட்டனூரில் வேறொரு பெயரில் தலைமறைவாக இருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை உறுதி செய்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு சவாத் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேராசிரியரின் கையை வெட்டிய 13 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Joseph ,Thotupuzha ,Idukki district ,Kerala ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!