×

ரூ.1000, பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 2 கோடியே 20 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,436.19 கோடி செலவில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப் பணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி ெதாடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மக்கள் பொங்கல் கொண்டாடுவதற்கு ரொக்கப்பணமும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். அதேநேரம் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை பணியாளர்கள் மற்றும் சர்க்கரை அட்டைதாரர்கள், எந்த பொருளும் இல்லாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசு பெற வீடு, வீடாக கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், அரிசி அட்டைதாரர்கள் பலருக்கு டோக்கன் விநியோகிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. டோக்கன் கிடைக்காத அரிசி அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துபவர்கள் உட்பட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதன்மூலம் 2,19,71,113 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதற்கு ரூ.2,436.19 கோடி செலவு செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கிடும் பணியை தொடங்கி வைப்பதன் அடையாளமாக நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டியுசிஎஸ் ரேஷன் கடையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினையும், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ. த.வேலு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் கோபால், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ஹர்சஹாய் மீனா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கும் பணி நேற்று காலை முதல் தொடங்கியது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அரசு அறிவித்த ரூ.1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தனர்.

அரசு அறிவித்துள்ள 2 கோடியே 19 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவருக்கும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வழங்க ரேஷன் கடைகள் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ரூ.1000 ரொக்கம் பெற டோக்கனில் குறிப்பிட்ட தேதி, நேரத்துக்கு வந்து 13ம் தேதி வரை பெறலாம். விடுபட்டவர்களுக்கு 14ம் தேதி வழங்கப்படும். ரேஷன் கடைக்கு செல்பவர்கள் கைரேகை வைத்த பிறகே பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேட்டி, சேலை திட்டம் தொடக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திடும் வகையில், 1 கோடியே 77 லட்சம் வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 லட்சம் சேலைகள் வழங்கிட தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படும். அதன்படி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

The post ரூ.1000, பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : M.O. K. Stalin ,Chennai ,Pongal festival ,Tamil Nadu ,K. Stalin ,Pacharisi ,Mudhalvar ,Stalin ,
× RELATED சின்னம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா