×

வீடு புகுந்து பொருட்களை ருசி பார்த்த இரட்டை கரடிகள்

நெல்லை: நெல்லை விகேபுரம் கோட்டைவிளைபட்டியில் வீட்டிற்குள் புகுந்த 2 கரடிகள் வரண்டாவில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை தின்று விட்டு ஹாயாக சென்றது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நெல்லை மாவட்டம் விகேபுரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது மலையடிவார பகுதி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதுடன், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று விகேபுரம் கோட்டைவிளைபட்டியில் வீட்டின் வரண்டாவில் 2 கரடிகள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விகேபுரம் கோட்டைவிளைபட்டியில் வசித்து வருபவர் வைகுண்டராமன். இவரது வீட்டின் வரண்டாவில் நேற்று அதிகாலை புகுந்த இரண்டு கரடிகள் ஜோடியாக சுற்றி வந்து அங்கு வைத்திருந்த பொருட்களை தின்று தீர்த்தன. பின்னர் கரடிகள் ஹாயாக வீட்டைச் சுற்றி உலா வந்தன. காலையில் கண் விழித்து எழுந்த வைகுண்டராமன், வரண்டாவிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கு வைத்திருந்த காமிராவில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது வரண்டாவில் 2 கரடிகள் ஜோடியாக வந்ததும், அவை வரண்டாவில் இருந்த பொருட்களை தின்று தீர்த்ததும் தெரியவந்தது.

வீடு அடைக்கப்பட்டிருந்ததால் கரடிகளால் உள்ளே வரமுடியவில்லை. இதனால் வரண்டா வரை வந்த கரடிகள் அங்குள்ள பொருட்களை சூறையாடிவிட்டு ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து வைகுண்டராமன் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே, இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை கரடி கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது. எனவே, விகேபுரம் பகுதியில் அச்சுறுத்தி வரும் கரடிகளை பிடிக்க கூண்டு வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

The post வீடு புகுந்து பொருட்களை ருசி பார்த்த இரட்டை கரடிகள் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai Vikepuram Kodhavilapatti ,Vikepuram Western Ghats ,Nellai district ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...