×

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை நிர்வகிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் புதிய பணியிடத்தை உருவாக்க தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை நிர்வகிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் புதிய பணியிடத்தை உருவாக்க அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவு அளித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” 30.12.2023 அன்று திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்கள்.

இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இன்று (9.1.2024) சென்னை, தலைமைச் செயலகத்தில், அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தலைமையில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ள “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின்” செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்கும் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் செயல்பாடுகள் குறித்து செயல்பாட்டினை மதிப்பாய்வு செய்து மற்றும் பல்வேறு துறைகளின் பொறுப்புகளை ஆய்வு செய்தார். மேலும் இப்பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு போதுமான தகவல் வழங்குதல், பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குதல், போக்குவரத்து விதிமுறைகள், பேருந்து முனையத்தில் சுகாதாரம், பயணிகளை பிரதான முனையத்திலிருந்து MTC முனையத்திற்கு மாற்றுதல் மற்றும் சிறந்த வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயணிகளின் வசதிகளை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஒவ்வொரு துறையும் முன்வைத்தனர்.

இக்கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தினந்தோறும் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்னைகளை ஒருங்கிணைக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், கும்டா, மாநகர காவல் ஆணையர் (தாம்பரம்), மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், SETC, TNSTC, MTC மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்க தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இப்பேருந்து முனையத்தை “பிளாஸ்டிக்-இல்லா முனையமாக” “(Plastic-free Zone)”, செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை நிர்வகிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் புதிய பணியிடத்தை உருவாக்கவும், அந்த மாவட்ட வருவாய் அலுவலருக்கு துணையாக துணை ஆட்சியர்கள் மற்றும் பேருந்து முனையத்தில் நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் பணியாளர்களைக் கொண்டு குத்தம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் உள்ள பிற முனையங்களையும் நிர்வகிக்க பணிகளில் ஈடுபடுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இப்பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்ட பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்கு, வண்டலூர் மற்றும் ஐயனஞ்சேரி சாலை சந்திப்பு மேம்பாடு ஏற்படுத்துதல், வண்டலூர் ரயில்வே சந்திப்புக்கு தற்போதுள்ள சேவைகளுடன் கூடுதலாக ஷட்டில் பேருந்து சேவைகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் தொடர்பான தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் அனைத்து பணிகளையும் முடிக்குமாறு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அவர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டார். மேலும், பொங்கலுக்குப் பிறகு TNSTC மற்றும் ஆம்னி பேருந்துகளின் இயக்கங்களை மாற்றவும், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முழுத்திறனுடன் செயல்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தினார்.

The post கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை நிர்வகிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் புதிய பணியிடத்தை உருவாக்க தலைமைச் செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Officer ,Clambakkam Bus Terminal ,CHENNAI ,Shiv Das Meena ,Klambakkam Bus Terminal ,Tamil Nadu ,Chief Minister ,Chengalpattu District ,Klambacham ,Revenue Officer ,Klambacham Bus Terminal ,Dinakaran ,
× RELATED திடீர் கனமழை வந்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கப்படும்: சிவ்தாஸ் மீனா!