×

கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்!

நன்றி குங்குமம் தோழி

எத்தனை எத்தனை உயர் ரக வளையல்களை ஒரு வளைப்பூட்டு நிகழ்ச்சியில் அணிவித்தாலும், அந்த சமயத்தில் அணிவிக்கும் கண்ணாடி வளையல்களைதான் அதிகமாக பெண்கள் விரும்புவார்கள். காரணம், கண்ணாடி வளையல் அணிவதால், அதன் ஓசையின் மூலம் கருவில் வளரும் குழந்தையிடம் பல மாற்றங்கள் ஏற்படும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி வளையல்கள் சத்தம் கேட்கும் போது, குழந்தைகளின் ஒலித் திறன் மேம்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண கண்ணாடி வளையல்களில் கிடைக்கும் ஓசை மற்ற உயர் ரக வளையல்களில் கிடைப்பதில்லை. எனவே இந்த கண்ணாடி வளையல்களை விரும்பும் மக்கள் அதிகம். ஆடை அணிகலன்களில் மாற்றங்கள் வந்தாலும், கண்ணாடி வளையல்கள் இன்றும் அதேபோல்தான் கடைகளில் கிடைக்கிறது. திருமணம், வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு என பெண்களுக்கு நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் சம்பிரதாயம், சடங்கு என அனைத்திற்கும் இந்த கண்ணாடி வளையல்களே பயன்பாட்டில் உள்ளது.

பொதுவாக கோயில் திருவிழாக் கள் மற்றும் சந்தையில்தான் கண்ணாடி வளையல்கள் விற்கப்படும். அதனை பெண்கள் தங்களின் உடைகளின் நிறத்திற்கேற்ப வாங்கி அணிவதுண்டு. காலம் மாறமாற கண்ணாடி வளையல்களின் டிசைன்களிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் தங்களின் ஆடையின் நிறம் மற்றும் வடிவமைப்புகளுக்கு ஏற்ப வலையல்களை பிரத்யேகமாக டிசைன் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்காகவே அமைக்கப்பட்டதுதான் ‘ப்ளாசம் பேங்கல்ஸ்’ கண்ணாடி வளையல் கடை. இதனை துவங்கியவர் பவித்ரா. இந்த கண்ணாடி வளையல் கடை உருவான பயணம் பற்றி விளக்குகிறார்.

‘‘என்னுடைய வளைப்பூட்டு நிகழ்ச்சி கொரோனா ஊரடங்கின் போதுதான் நிகழ்ந்தது. அந்த நேரத்தில் கடைகள் இல்லாத காரணத்தால் வளையல்கள் கிடைக்காமல் ரொம்பவே கஷ்டப்
பட்டோம். ஆன்லைனில் வாங்கலாம் என்று பார்த்தால், நான் எதிர்பார்த்தது போல் இல்லை. அந்த சமயத்தில்தான் நாம ஏன் வளையலுக்கு என தனியாக ஒரு கடை ஆரம்பிக்கக் கூடாது என எண்ணம் ஏற்பட்டது. முதலில் ஆன்லைனில்தான் நாங்க வளையல் பிசினசை ஆரம்பித்தோம்.

குறிப்பாக திருமணம் மற்றும் வளைகாப்பு போன்ற நிகழ்வுகளுக்காகவே கண்ணாடி வளையல்களை விற்பனை செய்து வந்தோம். அதன் பின் குழந்தைகளுக்கான கண்ணாடி மற்றும் மெட்டல் வளையல்களை அறிமுகம் செய்தோம். பெரியவர்களுக்கு கண்ணாடி வளையல்களை எப்படி உடைக்காமல் உபயோகிக்கணும் என்று தெரியும். ஆனால் குழந்தைகளுக்கு தெரியாது என்பதால், மூன்று வயது குழந்தைகள் வரை மெட்டல் வளையல் மட்டுமே விற்பனை செய்தோம். 3 முதல் 10 வரை உள்ளவர்களுக்கு மெட்டல் மற்றும் கண்ணாடி வளையல்கள் இரண்டுமே உண்டு. பெரியவர்களுக்கு கண்ணாடி வளையல்கள் மட்டும்தான்.

நம் பாட்டி, தாத்தா ஏன் அம்மா காலத்திலும், தங்க நிற கோடுகள் பதித்த கொத்து கண்ணாடி வளையல்தான் அதிகம் பயன்பாட்டில் இருந்தன. இன்றும் இந்த வளையல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், நாங்க அந்த கொத்து வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வளையல்களை விற்பதில்லை. எங்களிடம் இருக்கும் அனைத்து வளையல்களிலும் புதுப்புது வடிவமைப்புகள், வேலைப்பாடுகள் மற்றும் நிறங்களை கொண்டு வந்துள்ளோம். நாங்க இங்கு வளையல்களை தயாரிப்பதில்லை.

ஒவ்வொரு டிசைன்களையும் ஒவ்வொரு இடங்களில் இருந்து வாங்கி வருகிறோம். இந்தியாவில் அனைத்து பகுதியில் இருந்தும் பல புது டிசைன்கள் கொண்ட வளையல்களை நாங்க வாங்கி இங்கு விற்பனை செய்கிறோம். அதே சமயம் என்னுடைய விருப்பத்திற்கேற்ப சில வளையல்களை நான் டிசைன் செய்ய சொல்லி வரவழைக்கிறேன். இங்கிருக்கும் 27% வளையல்கள் நான் வடிவமைத்ததுதான். அந்த டிசைன்கள் வேறு எங்கும் எந்த கடைகளிலும் கிடைக்காது. பொங்கலுக்கு கூட புதுவிதமான வடிவமைப்புகள் கொண்ட வளையல்களை அறிமுகப்படுத்த இருக்கிறேன்’’ என்றவர் தன் குடும்பத்தினர் இல்லாமல் இந்த தொழிலை சக்சஸ்ஃபுல்லாக நடத்தி இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

‘‘நான் கருவுற்ற சமயத்தில் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் உடல் உபாதைகளும் எனக்கும் இருந்தது. மேலும் அந்த சமயத்தில் நான் ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்தேன். வேலை பார்த்துக்கொண்ேட தான் நான் இந்த தொழிலை துவங்கினேன். ஆனால் என்னால் அந்த சமயத்தில் முழுமையாக இந்த தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. அப்போது என் அம்மா மற்றும் கணவர்தான் இதனை முழுமையாக பார்த்துக் கொண்டாங்க.

ஆன்லைன் என்பதால், என் கணவர் மற்றும் அம்மா அதில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப வளையல்களை பேக் செய்து டெலிவரிக்கு அனுப்புவாங்க. இவர்கள் இல்லையென்றால், என்னுடைய இந்த தொழில் மக்களிடையே இந்த அளவிற்கு வரவேற்பு பெற்றிருக்காது. ஆன்லைன் என்பதால் ஆரம்பத்தில் வீட்டில் இருப்பவர்கள் நாங்க மட்டுமே இதனை பார்த்துக் கொண்டோம். அதில் நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு இப்போது வளையல்களுக்காகவே பிரத்யேக கடையினை கோவையில் திறந்தோம். கடை விற்பனையை பார்த்துக் கொள்ள பெண்களை வேலைக்காக நியமித்து இருக்கிறோம். சொந்தமாக கடை திறந்த பிறகு தான் ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனைக்கும் பல வேறுபாடுகள் இருப்பது தெரிய வந்தது.

ஆரம்பத்தில் ஆன்லைனில்தான் வளையல்களை விற்பனை செய்தோம். அதனால் உலகில் பல்வேறு பகுதியிலிருந்து எங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க. ஆன்லைன் டெலி வரியில் சில பிரச்னைகளை சந்தித்தோம். காரணம், எங்களுடையது முற்றிலும் கண்ணாடி வளையல்கள் என்பதால், அது உடைந்துவிடாமல் இருக்க மிகவும் கவனமாக பேக் செய்வோம். ஆனால் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கொரியர் செய்வதில் சிரமம் ஏற்படும்.

அவர்கள் அதனை டெலிவரி செய்யாமல் அப்படியே போட்டு வைத்திடுவார்கள். அதனால் பல நேரங்களில் ஒரு சில வளையல்கள் உடைந்திடும். சில சமயம் சொன்ன நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமல் போகும். இது போன்ற பிரச்னைகளை சமாளிக்க வேண்டும். நேரடி விற்பனையில் இந்த சிக்கல்கள் இருக்காது. வளையல்கள் உடையாது. வாடிக்கையாளர்கள் நேரடியாக வளையல்களை வாங்கி செல்வதால், பேக்கிங் மற்றும் டெலிவரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் போடப்படும் வளையல்களுக்கு தனிப்பட்ட அர்த்தம் உண்டு. திருமணத்தின் போது போடப்படும் வளையல்களை உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காரணம், அது அந்த பெண்ணின் பொறுமையை குறிக்கும். மேலும், வளையல்கள் உடையாமல் இருப்பது, குடும்ப பந்தம் உடைந்து போகாமல் பார்த்துக்கொள்வதாக கருதப்படுகிறது. இதுவே வளைகாப்பின் போது போடப்படும் வளையல்கள் குழந்தையின் செவித்திறன் மற்றும் செயல் திறன் இவற்றை அதிகரிப்பதாகவும், வளையல்களின் ஒலியை கேட்கும் போது குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியோடும் இருப்பதாக குறிப்பிடுவார்கள்.

மற்ற உலோகத்தால் ஆன வளையல்களை விட கண்ணாடி வளையல்களையே பெண்கள் அதிகம் விரும்ப காரணம், அதில் ஏற்படும் ஓசைகள். வளையல்களின் அடர்த்தி தன்மைக்கு ஏற்ப அதில் இருந்து எழும் ஓசையும் மாறுபடும். பொதுவாக பெண்கள் ஆடையின் நிறத்திற்கு வாங்குவார்கள். சிலர் அனைத்து வண்ண வளையல்களை விரும்புவார்கள். மற்றும் சிலர் அதில் இருந்து எழும் ஓசைக்காகவே வாங்குவார்கள்.

எல்லா வளையல்களும் அனைவருக்கும் பொருந்தாது. அவரவர் கைகளின் அளவிற்கு ஏற்ப வளையலின் அளவும் மாறுபடும். சில பெண்களின் கை பருமனாக இருக்கும். அவர்களுக்கு பிடித்த டிசைன்களை நாங்க பிரத்யேகமாக ஆர்டர் செய்து தருகிறோம். வளையல்களின் டிசைன்களுக்கு ஏற்ப விலையும் மாறுபடும். மிக்ஸ் மேட்ச் வளையல்களும் இங்குண்டு’’ என்றார் பவித்ரா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்! appeared first on Dinakaran.

Tags : kungkum dothi ,
× RELATED ஒரு பெண்ணின் காதல்