×

நிலம்,சொத்து தகராறில் போலீசார் தலையிடக்கூடாது காவல்துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அருண் சுற்றறிக்கை

சென்னை: நிலம்,சொத்து தகராறில் போலீசார் தலையிடக்கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அருண் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பணத்தகராறு, நிலத் தகராறு, சொத்துத் தகராறு, பாதைத் தகராறு, அறிவுசார் சொத்துத் தகராறு போன்ற முற்றிலும் சிவில் பிரச்னை தொடர்புடைய மனுக்கள் மீது சில காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

எனவே சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்களில் தவிர, சிவில் பிரச்னைகளில் போலீசார் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. மேலும் எப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர் அல்லது உயர் அதிகாரிகளால் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் இல்லாமல் எந்தவொரு மனுக்கள் மீதும் காவல்துறையால் எந்த விசாரணையும் இருக்கக்கூடாது. பணத் தகராறு, நிலத் தகராறு, சொத்துத் தகராறு, வழித்தட தகராறு, அறிவுசார் சொத்து தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் விசாரணை அல்லது தலையிடுவதை காவல்துறை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் காரணமாக, சிவில் விவகாரங்களில் விசாரணை நடத்துவது அல்லது தலையிடுவது முற்றிலும் அவசியம் என்று காவல்துறை அதிகாரி கருதினால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நகரங்களில் உள்ள காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

The post நிலம்,சொத்து தகராறில் போலீசார் தலையிடக்கூடாது காவல்துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அருண் சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : ADGP Arun ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...