×

சின்னச் சின்ன மாற்றங்கள்… ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்!

நன்றி குங்குமம் தோழி

சித்த மருத்துவர் பிரியா

சித்த மருத்துவம் என்பது மிகவும் பழமையான மருத்துவ முறை. துறவிகள் மற்றும் சித்தர்கள் ஆராய்ந்து இந்த மருத்துவ முறையினை செயல்படுத்தி வந்தனர். இந்த மருத்துவத்தில் நோயை குணப்படுத்துவது மட்டுமில்லாமல் நோயாளியின் வயது, பாலினம், பழக்கவழக்கங்கள், உணவு, தோற்றம் என அனைத்தையும் கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். அப்படிப்பட்ட மருத்துவ முறையினை தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறார் சேலத்தினை சேர்ந்த ‘ஆதி அகத்தியர் ஹெல்த் கேர் சித்த மருத்துவமனை’யின் சித்த மருத்துவரான டாக்டர் பிரியா.

‘‘நான் எட்டாவது தலைமுறை. என் முன்னோர்களை தொடர்ந்து என் கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பாவின் வழியில் நான் இந்த துறையில் ஈடுபட்டு வருகிறேன்’’ என்கிறார் சித்த மருத்துவரான டாக்டர் பிரியா. ‘‘எங்க மருத்துவமனையில் நீரிழிவு, சிறுநீரக பிரச்னை, ருமடாய்ட், குழந்தையின்மை, சரும பிரச்னை என பல வித நோய்களுக்கு தீர்வு அளித்து வருகிறோம்’’ என்று பேசத் துவங்கினார்.

‘‘என் முன்னோர்கள் காலத்தில் இருந்து நாங்க இந்த மருத்துவம் செய்து வருகிறோம். ஒரு முறை என் முன்னோர்களில் ஒருவர் பழனிக்கு முருகனை தரிசனம் செய்ய சென்றிருந்தார். அங்கு ஒரு சித்தரை கண்டுள்ளார். அவர் பல மருத்துவ குறிப்புகள் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் கற்றுக் கொண்ட போதுதான் சித்த மருத்துவம் மேல் என் முன்னோருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அவருக்கு முதல் முறையாக அறிவுரைக் கூறியவரை மீண்டும் அவரால் பார்க்கவே முடியவில்லை என்று அவர் சொன்னதாக என் தாத்தா, அப்பா சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். அதன் பிறகு மேலும் பல இடங்களுக்கு சென்று பல மருத்துவ குறிப்புகளை கற்றுள்ளார்.

அதன் பிறகுதான் சேலத்தில் இந்த சித்த சிகிச்சை மையத்தை துவங்கினார். அவரைத் தொடர்ந்து வழிவழியாக நாங்க இந்த சிகிச்சை முறைகளை கடைபிடித்து வருகிறோம். ஆரம்பத்தில் குருகுல முறையில் தான் சித்த மருத்துவ பயிற்சி அளிக்கப்பட்டது. காலப்போக்கில் அதனை மருத்துவ படிப்பாகவே படித்து வருகிறோம். நானும் சித்த மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறேன். ஆனால் எங்க வீட்டில் ஓலைச்சுவடிகளில் உள்ள மருத்துவ முறைகளைதான் என் பட்டப்படிப்பில் படிச்சேன். சொல்லப்போனால், சின்ன வயசில் நான் பார்த்து வளர்ந்த மூலிகைகளை கொண்டு எப்படி மருந்து தயாரிக்கலாம் என்பதை நான் என்னுடைய பாடப்புத்தகத்தில் பார்க்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

நான் சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் யோகா, ஹெர்பல் குறித்த சிகிச்சை முறைகளையும் பயின்று இருக்கேன். சித்த மருத்துவத்தை தமிழகம் மட்டுமில்லாமல், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பின்பற்றி வருகிறார்கள். மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு, தேள் போன்ற விஷக்கடிக்கு எல்லாம் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளித்து வந்தாங்க. என் அப்பாவோட தாத்தா எல்லாம் அதற்கான சிகிச்சை கொடுத்து நான் பார்த்திருக்கேன். அதேபோல் மாட்டுக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும் சிகிச்சை கொடுப்பாங்க.

இப்போது இதனை கால்நடை மருத்துவம் என்று பிரிச்சிட்டாங்க. மேலும் விஷக்கடிக்கும் நாங்க சிகிச்சை பார்ப்பதில்லை. இதைத் தவிர மற்ற அனைத்து நோய்களான மூட்டு வலி, குழந்தையின்மை, மஞ்சள் காமாலை, சரும பிரச்னை… என அனைத்து பிரச்னைக்கும் நாங்க எட்டு தலைமுறையா சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்றவர் 2010ம் ஆண்டு முதல் சித்த மருத்துவத்தில் தன்னைஈடுபடுத்தி வருகிறார்.

‘‘நான் கல்லூரிப் படிப்பை முடிச்ச கையோடு, என் குடும்பத்தின் பாரம்பரிய சித்த மருத்துவமனையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இதில் மாத்திரை, லேகியம், சூரணம், சிரப் என அனைத்து முறையிலும் நாங்க மருந்து அளிக்கிறோம். இதில் ஒவ்வொரு நோய் மற்றும் நோயாளியின் உடலைப் பொருத்து மருந்தின் அளவு மாறுபடும். எல்லோருக்கும் ஒரே மாதிரி மருந்துகள் கொடுக்க மாட்டோம். அவர்களின் பிரச்னை என்ன என்று பார்த்து தான் மருந்து அளிக்கப்படும்.

உதாரணத்திற்கு ருமடாய்ட் நோய் என்பது நீண்ட கால சிகிச்சை முறை. அதற்கு டாக்டரின் ஆலோசனைப்படி அவர்கள் சொல்லும் காலம் வரை மருந்துகளை எடுக்க வேண்டும். ஆனால் அதுவே, பைல்ஸ் போன்ற பிரச்னை என்றால், அது குணமானதும் மருந்து உட்கொள்வதை நிறுத்திவிடலாம். எல்லா நோய்க்கும் அலோபதியில் மருந்துள்ளது. ஆனால் சித்த மருத்துவம், ஒருவரின் உடலில் நன்கு ஊறி, அதற்கு ஏற்ப நோயின் தன்மையை குறைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு மட்டுமில்லாமல், ஜுரம், சளி, எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கவும் இங்கு மருந்துள்ளது.

எல்லா மருந்துகளும் ஒரு குறிப்பிட்ட நேரம் கணக்குள்ளது. ஒருவருக்கு மருந்து அளிக்கும் போது, அவர்களின் ேநாய் படிப்படியாக குணமாகும். அதன் அடிப்படையில் அவர்கள் அடுத்த முறை வரும் போது, மருந்தின் அளவில் மட்டுமல்லாமல், வேறு மருந்து மாற்றிக் கொடுப்போம். இதில் பலதரப்பட்ட மூலிகைகள் கலந்து இருப்பதால், ஒருவரின் உபாதைக்கு ஏற்ப மூலிகைகளில் காம்பினேஷனும் மாறுபடும். மூலிகைகள் மட்டுமில்லாமல் மெட்டாலிக் மருந்துகளும் உள்ளது. அதாவது உலோகங்கள் கொண்டு செய்யப்படும் மருந்துகள்.

இதனை டாக்டரின் ஆலோசனைப் படிதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் நாங்க நோயாளியை நேரில் பார்த்து அவர்களை ஆய்வு செய்த பிறகு தான் சிகிச்சை அளிப்போம். மருந்துகளும் அவ்வப்போது தயாரிப்பதால், நோயின் வீரியத்தை குறைத்து அவர்கள் சீக்கிரம் குணமாக வழிவகுக்கிறது’’ என்றவர் எந்த நோய்களுக்கு எந்த மருந்து பயன் அளிக்கும் என்பது குறித்து விளக்கினார்.

‘‘சித்த மருத்துவத்தில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைகள் உள்ளது. மனிதனை இவ்வளவு நோய்கள் தாக்கும் என்ற கணக்குள்ளது. அதில் ஒவ்வொரு நோய்க்கான மருந்துகளை பற்றி சித்த மருத்துவத்தில் நம் முன்னோர்கள் குறிப்பெடுத்து வைத்துள்ளனர். மூலிகைகள் கொண்டுதான் இந்த மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு மூலிகைச் செடியின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மூலிகைகள் மட்டுமில்லாமல் மற்ற இயற்ைக வளங்களான உலோகங்கள் (தங்கம், வெள்ளி), கனிமங்கள் மற்றும் நவரத்தினங்களும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. மூலிகை மருந்துகள் ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.

கனிமங்கள் மற்றும் உலோகங்களால் செய்யப்படும் மருந்து பல ஆண்டுகள் வரை அதன் தன்மை மாறாமல் இருக்கும். அப்படிப்பட்ட மருந்துகளை நாம் சிறிய அளவில் தான் உட்கொள்ள வேண்டும். அதனால் தான் ஒவ்வொரு மருந்தும் எவ்வளவு அளவு எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். சித்தா பொறுத்தவரை மருந்து சாப்பிடுவது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் உணவு முறையிலும் சில விதிகளை கடைபிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு பாவக்காய், நல்லெண்ணெய், அகத்திக்கீரை, புளி போன்றவை சித்தா மருந்துகளை முறிக்கக்கூடிய உணவுகள். இது மருந்துகளில் வீரியத்தை குறைக்கும். உலோக மருந்துகளுக்கு கோழி, கருவாடு, முட்டை எடுத்துக் கொள்ளக்கூடாது. ருமடாய்டுக்கு அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சில சமயம் ஒருவருக்கு எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் சில உணவுகள் ஹமோகுளோபின் அளவினை குறைக்கும். அவர்கள் அந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நல்ல தூக்கம் அவசியம். தினசரி உடற்பயிற்சி மற்றும் யோகா மேற்கொள்ளலாம். ஆறு மாதம் ஒரு முறை உடலை டீடாக்ஸ் செய்வதால் குடல் சுத்திகரிக்கப்படும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் சூடு குறையும். இதுபோல் சின்னச் சின்ன மாற்றங்களை கடைபிடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் பிரியா.

தொகுப்பு: ஷன்மதி

The post சின்னச் சின்ன மாற்றங்கள்… ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்! appeared first on Dinakaran.

Tags : Doshi Siddha ,Doctor ,Priya ,
× RELATED ரத்னம் விமர்சனம்